உள்ளடக்கத்துக்குச் செல்

குருச்சேத்திரப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருச்சேத்திரப் போர்

மகாபாரத காவியத்தின்படி விவரங்கள்


இதிகாச காலத்துப் பாரதம்
இடம் குருச்சேத்திரம், அரியானா மாநிலம், இந்தியா
போரின் முடிவில் கௌரவர் கூட்டணிப் படைகள் தோற்றது. பாண்டவர் கூட்டணிப் படைகள் வென்றது.
திருதராட்டிரன் முடி துறந்தார். தருமன், அத்தினாபுரத்தின் அரியணை ஏறினார்.
யுயுத்சு, இந்திரப்பிரஸ்தம் நாட்டின் அரசனாக அமர்த்தப்பட்டான்.
துரோணர் வசம் இருந்த பாஞ்சால நாட்டின் பாதி மீண்டும் பாஞ்சாலர்களுக்கே வழங்கப்பட்டது. காசி, மதுரா, அங்கம், காந்தாரம், சேதி, கோசலம், கலிங்கம், மகத நாடு, பாஞ்சாலம், சிந்து மற்றும் மத்சய நாட்டு மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் இறந்த காரணத்தினால் அந்நாடுகளுக்கு புதிய மன்னர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
பாண்டவர் தலைமையில் இந்திரப்பிரஸ்தம் மீண்டும் அத்தினாபுரத்துடன் இணைக்கப்பட்டது.
பிரிவினர்
நாடற்ற பாண்டவர்கள், பாஞ்சால, மத்சய நாட்டுப் படைகள் மற்றும் பாண்டவர்களின் நட்பு நாட்டு படைகள். குரு நாட்டின் கௌரவர் படைகள், மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள்.
தளபதிகள், தலைவர்கள்
கூட்டணிப் படைகளின் அரசன்
தருமன்
தலைமைப் படைத்தலைவர்கள்
சுவேதன் (நாள் 1) 
திருட்டத்துயும்னன் (நாள் 2 முதல் 18 முடிய) 
போர்த் தந்திரங்கள் வகுத்தல்
ஸ்ரீகிருஷ்ணர்
கூட்டணிப் படைகளின் அரசன்
துரியோதனன் 
தலைமைப் படைத்தலைவர்கள்
பீஷ்மர் (நாள் 1-10 முடிய) 
துரோணர் (நாள் 11-15 முடிய) 
கர்ணன் (நாள் 16-17 முடிய) 
சல்லியன் (நாள் 18) 
அசுவத்தாமன் (18ம்நாள் இரவில் நடத்திய படுகொலைகள்)
போர்த் தந்திரங்கள் வகுத்தல்
சகுனி 
பலம்
7 அக்குரோணி
(1,530,900 படைகள்)
11 அக்குரோணி
(2,405,700 படைகள்)
இழப்புகள்
8 பேர் தவிர அனைவரும் இறந்தனர்
உயிருடன் இருந்தவர்கள்-பாண்டவர் ஐவர், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு.
4 பேர் தவிர அனைவரும் இறந்தனர்
உயிருடன் இருந்தவர்கள்-அசுவத்தாமன், கிருபர், கிருதவர்மன் மற்றும் விருச்சகேது.

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

குருச்சேத்திரப் போர் நடந்த காலம்

[தொகு]

குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். ஆனால் எவராலும் குருசேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு அறுதியாக கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். குருச்சேத்திரப் போர் பொ.ஊ.மு. 1500-இல் நடைபெற்றதாக கூறப்படினும் ,ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட மட்கலப் பண்பாடு பொ.ஊ.மு. 1100-க்கு முற்பட்டதல்ல என்று பி.கே.தாபர், பி.பி.லால், ஆர்.எஸ் கௌர்,ஐ.பி ஜோக்ஷி போன்ற தொல்லியலாளர்களால் கண்டுபிடித்து கூறப்பட்டன. மேலும் மகாபாரத்தில் கூறப்படும் நாடுகளில் மன்னராட்சி முறையும் முறைப்படி பொ.ஊ.மு. 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே வருவதாக கொண்டாலும், அந்நாடுகளின் உருவாக்கங்கள் பொ.ஊ.மு. 9–8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தெரியவருகிறது. ஆனால் துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்பட்டதாக எஸ்.ஆர்.ராவ் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து கூறியுள்ளார்.[1][2]

போருக்கான காரணங்கள்

[தொகு]

அத்தினாபுரத்தின் சூதாட்டமண்டபத்தில் துரியோதனனுக்கும், தருமருக்கும் இடையே நடந்த சூதாட்டத்தில், தருமர், தனது இந்திரப்பிரஸ்தம் நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தங்கள் மனைவி திரெளபதியையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான்.

பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் மற்றும் அத்தினாபுர மன்னன் திருதராட்டிரன் ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்கள் கண்டு கொள்ளப்பட்டால் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.

ஒப்பந்தப்படி, 12-ஆண்டு காடுறை வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வு முடிந்தவுடன், பாண்டவர்கள் தாங்கள் சூதில் இழந்த நாட்டை கேட்டு ஸ்ரீகிருஷ்ணரை, அத்தினாபுர மன்னன் திருதராட்டினரிடம் தூது அனுப்பினர். கிருஷ்ணரின் கோரிக்கையை துரியோதனன் ஏற்கவில்லை. காரணம் பாண்டவர்கள் ஒராண்டு தலைமறைவு வாழ்வின் போது தான் அருச்சுனனை கண்டு கொண்டதால், பாண்டவர்கள் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான்.

ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருதராட்டிரரிடம், பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகளாவது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு கூட இடம் அளிக்க முடியாது என ஆணவமாக பேசி, தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பு விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள்.

போரில் நடுநிலை வகித்தவர்கள்

[தொகு]
குருச்சேத்திரப் போர்க் காலத்திய இந்தியா

பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.

கௌரவர்களின் கூட்டணிப் படைகள்

[தொகு]

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், பீஷ்மர், துரோணர், கிருபர், துரியோதனன், கர்ணன், துச்சாதனன், விகர்ணன், துச்சலையின் கணவனாக சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், சகுனி, காந்தார சகுனியின் மகன் உல்லூகன், சல்லியன், பர்பரிகன், பூரிசிரவஸ், பாக்லீகர்கள், பிராக்ஜோதிசத்தின் பகதத்தன், நிசாதர்கள், திரிகர்த்தர்களின் சுசர்மன், சம்சப்தகர்கள், காம்போச அரசன் சுதக்சினன், அவந்தி நாட்டு விந்தன் மற்றும் அனுவிந்தன், கேகய நாட்டு ஐந்து இளவரசர்கள், கலிங்கர்கள், ஆந்திரர்கள், யவனர்கள், சகர்கள் காம்போஜர்கள், மகிஷ்மதி, கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படையும் மற்றும் 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர்.கௌரவர்கள் படைகளின் தலைவராக பேரிளவரசர் பீஷ்மர் நியமிக்கப்பட்டார். கௌரவர் படைகளின் அரசராக களத்தில் இல்லாத அஸ்தினாபுர அரசர் திருத்திரட்டினான் இருந்தார். களத்தில் கௌரவர் படைகளின்  முழு நிர்வாகியாக அஸ்தினாபுர முதல் இளவரசன் துரியோதனன் இருந்தான். பீஷ்மர் களத்தில் உள்ளவரை "அங்க" தேசத்து அரசன் கர்ணன் களம் புக மறுத்துவிட்டார். சகுனி கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் தலைமை சூத்திரதாரியாக சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. கௌரவர்  படைகளின் குறிக்கோள், பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல வேண்டும். குறைந்தது தர்மனை கைது செய்து பாண்டவர் குடும்பத்தை நிரந்தரமாக வனவாசம் அனுப்பவேண்டும்.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

[தொகு]

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப் பாஞ்சால அரசன் துருபதன், அவர் மகன்கள் திருட்டத்துயும்னன் மற்றும் சிகண்டி, அபிமன்யு, கடோற்கஜன், அரவான், உபபாண்டவர்கள், மத்சய நாட்டு விராடன் மற்றும் அவர் மகன்களான உத்தரன், சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் சாத்தியகி, காசி நாட்டு மன்னன், கேகயர்கள், சேதி நாட்டு சிசுபாலன் மகன் திருஷ்டகேது, மகத நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனன், நீலனின் மகிஷ்மதி நாட்டுப் படைகள், பாண்டியர்கள் மற்றும் போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டான். பாண்டவ படைகளின் அரசனாக முன்னாள் பேரரசர் யுதிஷ்டிர தர்மன் இருந்தார்.பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்களை கூற தலைமை சூத்திரதாரியாக கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் பார்த்தனுக்கு சாரதியாக செயல்பட்டார். பாண்டவ படைகளின் குறிக்கோள், போரில் வென்று அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்ய வேண்டும். இளவரசன் பீமன் 100 கௌரவர்களையும் கொல்ல சபதம் செய்திருந்தான்.

ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு

[தொகு]

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

போர் விதிமுறைகள் வகுத்தல்

[தொகு]
  1. கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
  2. ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
  3. போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
  4. மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
  5. போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
  6. கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
  7. போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.
  8. காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
  9. மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
  10. போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.

படையணி அமைப்புகள் (வியூகங்கள்) வகுத்தல்

[தொகு]

வியாசரின் மகாபாரத இதிகாசத்தின்படி, தர்மச்சேத்திரமான குருச்சேத்திரத்தில் பாண்டவர் அணிப் படைகளுக்கும், கௌரவர் அணிப் படைகளுக்கும் நடந்த போரில், அணிகளின் தலைமைப் படைத்தலைவர்கள், தங்கள் படைகளை, தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு சிறப்பு வடிவத்தில் தங்கள் படைகளை (வியூகம்) அமைத்துக் கொண்டு போரிட்டனர். படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்:

  1. நாரை வியூகம்
  2. முதலை வியூகம்
  3. ஆமை வியூகம்
  4. திரிசூலம் வியூகம்
  5. சக்கர வியூகம்
  6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்
  7. கருட வியூகம்
  8. கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. வான் மண்டல வியூகம்
  10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
  11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம்
  13. தேவ வியூகம்
  14. ஊசி போன்ற வியூகம்
  15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. பிறை சந்திர வடிவ வியூகம்
  17. பூ மாலை போன்ற வியூகம்

சஞ்சயன் ஞானக்கண் பெறுதல்

[தொகு]

கண் பார்வையற்ற திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகளை அத்தினாபுர அரண்மனையில் இருந்தாவாறே பார்க்கும் பொருட்டு வியாசர் ஞானக்கண் வழங்க முன் வந்தார். ஆனால் கோரமான போர்க்களக் காட்சிகளை பார்க்க விரும்பாத காரணத்தினால், தனது தேரோட்டியான சஞ்சயனுக்கு அந்த ஞானக்கண் வழங்குமாறு வேண்டினார். வியாசரும் சஞ்சயனுக்கு ஞானக்கண் வழங்கி அவர் மூலம் திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகள் விளக்கப்பட்டது.

போர்க்களத்தில் கீதா உபதேசம்

[தொகு]
குருச்சேத்திரப் போர்களத்தில் கிருஷ்ணர், அருச்சுனனுக்கு கீதை அருளுதல். படம் கி. பி., 1830

போர் துவங்குவதற்கு முன்பு, போர்க்களத்தில் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாட்டனார் பீஷ்மர் மற்றும் குரு துரோணரை போன்றோர் இருப்பதால் போரிட மறுத்து துயர மேலீட்டால், தன் கை வில்லை தூக்கி எறிந்து, கவலையுடன் தேர்த்தட்டில் அமர்ந்தான். இதைக் கண்ட தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகளைப் பார்க்கக்கூடாது என்று விளக்கினார். அருச்சுனனுக்கு தர்மயுத்தம் செய்ய வேண்டியது ஒரு சத்திரியனின் கடமை என்று என்று எடுத்துக்கூறி, பகவத் கீதையை அருச்சுனனுக்கு அருளி, அருச்சுனனை போருக்கு ஆயத்தப்படுத்தினார் கண்ணன்.

குருச்சேத்திரப் போர்க்கள காட்சிகள்

[தொகு]

பதினெட்டு நாள் நடந்த குருசேத்திரப் போர் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய பருவம் மற்றும் சௌப்திக பருவம் எனும் ஐந்து பர்வங்களில் விளக்கப்படுகிறது. படைத்தலைவர்களை, அவரவர்களின் போர்த்திறனுக்கு ஏற்றபடி மகாரதர்கள் , அதிரதர்கள் மற்றும் அர்த்தரதர்கள் என வகைப்படுத்தி அவர்களின் கீழ் படையணிகளை நிறுத்தி இருந்தனர். போரில் வெற்றி பெற அரவானைப் பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான். முதலில் பீஷ்மர் தனது சங்கை ஊத, பின் மற்றவர்கள் தத்தமது சங்குகளை ஊதிப் போருக்கு ஆயத்தமாயினர்.

பீஷ்ம பர்வம்

[தொகு]
குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது.[3] பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

போர் நாள் 1

போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனு- கங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

போர் நாள் 2

பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.

போர் நாள் 3

பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

போர் நாள் 4

துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான்.

போர் நாள் 5 முதல் 9 முடிய

ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

போர் நாள் 10
அம்புப் படுக்கையில் பீஷ்மர்

பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான்.

பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு இச்சை மரணம் ("Ichcha Mrityu" (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர்.

துரோண பர்வம்

[தொகு]

துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.[4]

போர் நாள் 11

குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

போர் நாள் 12

தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான்.

போர் நாள் 13
அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.

கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன், கர்ணன், துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

போர் நாள் 14

அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

கர்ணன் கடோற்கஜனை கொல்தல்

14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

போர் நாள் 15

துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர்.

15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.

கர்ண பர்வம்

[தொகு]
போர் நாள் 16

துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான்.[5] கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி

அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன்.

போர் நாள் 17
கர்ணன் - அருச்சுனன் போர்

கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

சல்லிய பர்வம்

[தொகு]
போர் நாள் 18

பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான்.[6] இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது.

சௌப்திக பர்வம்

[தொகு]

தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த சமந்தபஞ்சகம் எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார்.

பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன், சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகி, யுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே.[7]

குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்

[தொகு]

கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

குருச்சேத்திரப் போருக்குப் பின்

[தொகு]

அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும், இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.

துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது.

அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

திருதராட்டிரன், காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர்.

தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்-சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யு- உத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதையும் காண்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-11-27.
  2. "Year of Mahabharata". Reversespins.com. 2004-02-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-03.
  3. http://www.sacred-texts.com/hin/m06/index.htm
  4. http://www.sacred-texts.com/hin/m07/index.htm
  5. http://www.sacred-texts.com/hin/m08/index.htm
  6. http://www.sacred-texts.com/hin/m09/index.htm
  7. http://www.sacred-texts.com/hin/m10/index.htm

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருச்சேத்திரப்_போர்&oldid=4084232" இலிருந்து மீள்விக்கப்பட்டது