உள்ளடக்கத்துக்குச் செல்

சா. கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சா. கணேசன்
பிறப்பு(1908-06-06)6 சூன் 1908
காரைக்குடி, சென்னை மாகாணம்
இறப்புசூலை 28, 1982(1982-07-28) (அகவை 74)
மற்ற பெயர்கள்கம்பனடிப்பொடி
பணிஅரசியல்வாதி, இலக்கியவாதி
பெற்றோர்சாமிநாதன் செட்டியார்
நாச்சம்மை ஆச்சி

கம்பனடிப்பொடி சா.கணேசன் (சூன் 6, 1908 - சூலை 28, 1982) என அழைக்கப்படும் சாமிநாத கணேசன் தமிழக அரசியல்வாதி; சமூக சேவகர்; தமிழ் இலக்கியவாதி; காந்தியவாணர்; கம்பரின் தமிழ் மீது ஈடுபாடு கொண்டவர். காரைக்குடி கம்பன் கழகத்தை உருவாக்கித் தமிழகத்தின் பல பகுதிகளில் கம்பன் கழகங்கள் உருவாக வழிகாட்டியவர் சிற்பக் கலை வல்லுநர்; கல்வெட்டாய்வாளர்; தமிழகத் தொன்மவியலாளர்.

பிறப்பு

[தொகு]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் வாழ்ந்த சாமிநாதன் – நாச்சம்மை இணையருக்கு 1908 சூன் 6-ஆம் நாள் கணேசன் பிறந்தார்.[1]

கல்வி

[தொகு]

சா. கணேசன் தனது தொட்டக்கக் கல்வியைக் காரைக்குடி ரெங்கவாத்தியார் என்பவர் நடத்திய திண்ணைப் பள்ளியில் பயின்றார். பண்டித வித்துவான் சிதம்பர ஐயர், பர்மா தோங்குவா பண்டித சேதுப்பிள்ளையிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். பின்னர் வடமொழியும் ஆங்கிலமும் கற்றார்.[1]

அரசியல் வாழ்க்கை

[தொகு]

காந்தி தொண்டர்

[தொகு]

1927-ஆம் ஆண்டு காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்தபொழுது இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து, காந்தியடிகளுக்கு பணிவிடை செய்யும் தொண்டர்படையின் தலைவர் ஆனார்.[1]

விடுதலைப் போரில்

[தொகு]

சா. கணேசன் 1936 ஆம் ஆண்டு முதல் இந்திய விடுதலைப் போரில் தீவிரமாகப் பங்கேற்றார். 1941 ஆம் ஆண்டில் நடைபெற்ற தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அச்சத்தியாக்கிரகத்தின் ஒரு பகுதியாக தில்லியை நோக்கி காரைக்குடியில் இருந்து நடைபயணத்தை மேற்கொண்டார். 66 நாள்களில் 586 மைல்களைக் கடந்து உத்திரப்பிரதேசத்தில் உள்ள அலிப்பூரை அடைந்தபொழுது கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

செட்டி நாட்டுப் பகுதியில் 1942 ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வீறோடு சா. கணேசன் நடத்தினார். மாறுவேடத்தில் ஊர் ஊராகச் சென்று மக்களை அப்போராட்டத்தில் ஈடுபடும்படி தூண்டினார். இதனால் அன்றைய ஆங்கிலேயே அரசு இவரை கண்டதும் சுடுவதற்கு ஆணை பிறப்பித்தது. இவருடைய வீடு அரசால் சூறையாடப்பட்டது. இதனால் தன் அரசியல் வழிகாட்டியான இராசகோபாலாச்சாரியாரின் அறிவுரையை ஏற்று சென்னை காவல் ஆணையரிடம் சரணடைந்தார். இவரை 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

சுதந்திரக் கட்சியில்

[தொகு]

இந்திய தேசிய காங்கிரசில் இருந்து கருத்துவேறுபாட்டின் காரணமாக வெளியேறிய இராசகோபாலாச்சாரியார் தன்னைப் பின்பற்றுவோரின் துணையுடன் சுதந்திராக் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். சா. கணேசன் அக்கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவர் ஆவார். இக்கட்சியின் சார்பில் 1962 ஆம் ஆண்டு தேர்தலில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு[2] 1967 வரை தமிழகச் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1968 முதல் 1974 வரை தமிழகச் சட்ட மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

கம்பன் கழகம்

[தொகு]

கம்பனின் தமிழ்த் திறத்தைப் போற்றும் நோக்கில் காரைக்குடியில் 1939 ஏப்ரல் 2-3 ஆகிய நாள்களில் கம்பன் கழகத்தைத் தோற்றுவித்து, கம்பன் திருநாள் கொண்டாடினார். அதன்பின்னர் ஆண்டுதோறும் கம்பன் இராமயாணத்தை அரங்கேற்றிய நாளில் கம்பன் விழாக் கொண்டாட ஏற்பாடு செய்தார். இதற்காக 1968-ஆம் ஆண்டில் கம்பன் மணிமண்டபத்தை காரைக்குடியில் கட்டினார்.[1] கம்பன் அறநிலை சார்பாக சிற்பச் செந்நூல் எனும் நூல் உருவாக துணைநின்றார்.[3]

கம்பராமாயணப் பதிப்பு

[தொகு]

சா. கணேசன் கம்பராமயாண ஏட்டுப்பிரதிகள் பலவற்றைத் திரட்டி, தமிழறிஞர்களின் உதவியோடு அவற்றையும் பிறபதிப்புகளையும் ஒப்பிட்டு, சந்திபிரித்த பனுவல்களை ஒன்பது தொகுதிகளாக மர்ரே நிறுவனத்தின் வழியாகப் பதிப்பித்து வெளியிட்டார்.[1]

கண்காட்சியும் கையேடும்

[தொகு]

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு 1968-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற பொழுது தமிழ்ப்பண்பாட்டையும் இலக்கிய வளத்தையும் வெளிப்படுத்தும் கண்காட்சி சா. கணேசனின் தலைமையில் அமைக்கப்பட்டது. அக்கண்காட்சிக்கான கையேடு என்னும் நூலையும் அவர் உருவாக்கினார்.

படைப்புகள்

[தொகு]

சா. கணேசன் சொற்பொழிவாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். அவர் பின்வரும் நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார்:

  1. நூற்பவருக்கு (1945 – நவயுகப் பிரசுராலயம்)
  2. கல்சொல்லும் கதை (கல்வெட்டு, வரலாற்று ஆய்வியல்)
  3. பிள்ளையார்பட்டி தல வரலாறு (1955 - பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் நகரத்தார் அறநிலை)
  4. இராஜராஜன்
  5. தமிழ்த் திருமணம்
  6. கட்டுரைக் களஞ்சியம்
  7. Some Iconographic concepக
  8. தேசிவிநாயகப் பிள்ளையார் ஒருபா ஒருபது

தமிழ்த்தாய் கோவில்

[தொகு]

சா. கணேசன் 1975-ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சரான மு. கருணாநிதியைக் கால்கோளிடச் செய்து காரைக்குடியில் தமிழ்த்தாய் கோயிலைக் கட்டினார். அறுகோண வடிவிலான அக்கோவிலில் தமிழ்த்தாய், அகத்தியர், தொல்காப்பியர், கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், ஒலித்தாய், வரித்தாய் ஆகியோருக்குச் சிலைகளை நிறுவினார்.[4]

மறைவு

[தொகு]

கம்பனடிப்பொடி சா. கணேசன் 1982 சூலை 28-ஆம் நாள் காரைக்குடியில் இயற்கை எய்தினார்.[1]

வாழ்க்கைவரலாறு

[தொகு]

சா. கணேசனின் வாழ்க்கை வரலாற்றைத் கவிதை வடிவில் சித. சிதம்பரம் என்பவர் கம்பன் அடிப்பொடி சா. கணேசன் கவிதை வரலாறு என்னும் நூலை எழுதியிருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
  2. eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1957 /StatRep_Madras_1957.pdf
  3. வை. கணபதி ஸ்தபதி. சிற்பச் செந்நூல். கம்பன் அறநிலை. பார்க்கப்பட்ட நாள் 2 December 2023.
  4. காரைக்குடி கம்பன் கழகப் பணிகள்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._கணேசன்&oldid=3943561" இலிருந்து மீள்விக்கப்பட்டது