உள்ளடக்கத்துக்குச் செல்

கோயில் (வழிபாட்டிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.மு 449 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஹெபீஸ்ட்டஸ் கோயில் எனப்படும் கிரேக்கக் கோயில் ஒன்று.

வழிபாட்டிடம் என்பது ஆன்மீக சடங்குகள், பிரார்த்தனை, பலியிடல் போன்ற செயல்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிடமாகும்.

பண்டை எகிப்தியக் கோயில்கள்

[தொகு]
பண்டை எகிப்தியக் கோயில் ஒன்று

பண்டைக்கால எகிப்தின் தொடக்கக் கோயில்கள் ஒரு மூடிய மண்டபம் ஆகும். இவற்றின் கூரைகள் தூண்களினால் தாங்கப்பட்டு இருந்தன. புதிய இராச்சியக் காலத்தில், வாயில் கோபுர அமைப்புக்கள், முற்றம், கோயில் கருவறைக்கு முன் அமைந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. இப் பாணி கிரேக்க -ரோமர் காலம் வரை நிலைத்து இருந்தது. பண்டை எகிப்தியக் கோயில்கள் கற்களால் கட்டப்பட்டன. சுற்று மதில்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

எகிப்தியக் கோயில்களின் நடுவில் ஒரு அறையில் கடவுள் உருவம் வைக்கப்படிருக்கும். அரசனின் சார்பில் ஒரு மதகுரு இதற்குப் பொறுப்பாக இருப்பார். இக் கோயில்கள் பொதுவாக மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைக்கப்படுவது இல்லை. கோயில் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் செல்ல முடியாதவாறு கோயில் பூட்டப்பட்டிருக்கும். விழா நாட்களில் மட்டும் சிலை மக்கள் வழிபடுவதற்காக கோயிலுக்கு வெளியில் எடுத்துவரப்படும்.

கிரேக்க - உரோமக் கோயில்கள்

[தொகு]

பண்டைக் கிரேக்கர்கள் தமது கோயில்களை டெமெனோஸ் என்று அழைத்தனர். இது புனிதப் பகுதி என்னும் பொருள் கொண்டது. பலி கொடுப்பதற்கான பலிபீடம் கட்டிடங்களுக்குப் புறத்தே அமைந்த வெளியிடத்திலேயே இருப்பதால், இக் கோயில்களின் புனிதம் முக்கியமாக இவ் வெளியிடங்களுடனேயே தொடர்புபட்டு உள்ளது. கிரேக்கக் கடவுளர் சிலைகளைத் தாங்கிய கட்டிடங்கள் தொடக்கத்தில் மிகவும் எளிமையான கட்டிடங்களாகவே இருந்தன. கி.மு ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை விரிவான நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்தன. கிரேக்கக் கோயில் கட்டிடக்கலை, பண்டைய கட்டிடக்கலை மரபுகளில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது.

கோயில்களின் அமைவிடத்தைத் தீர்மானிப்பதற்கான கிரியைகள், பறவைகளின் பறப்பை அல்லது வேறு இயற்கைத் தோற்றப்பாடுகளை அவதானித்துக் குறி சொல்பவரினால் நடத்தப்பட்டது. ரோமர் கோயில்கள் பொதுவாகக் கிழக்கு நோக்கியபடி அமைந்திருந்தன. எனினும் கோயில்களின் திசை குறித்த நுணுக்க விபரங்கள் சரியாகத் தெரியவரவில்லை. சில கோயில்கள் வேறு திசைகளை நோக்கியும் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக பந்தியன் (Pantheon) வடக்கு நோக்கியபடி உள்ளது.

இந்துக் கோயில்கள்

[தொகு]
கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் இந்துக் கோயில்.12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இதுவே உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும்.

பல நூறு மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள். இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம், மந்திர், மந்திரா, தேவஸ்தானம், தேவாலயம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து, ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பெரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன.

இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைக்காலத்தில், படையெடுப்புக்களாலும், பண்பாட்டுத் தொடர்புகளாலும் இந்து சமயம் இந்தியாவைத் தாண்டியும் விரிவடைந்தபோது வேறு பல நாடுகளிலும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில்கள் இந்தியாவுக்கு வெளியே கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைக்கப்பட்டன. இன்று, இந்துக்கள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வாழுகின்றனர். அதனால், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலும் கூடப் பல இந்துக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன.

அமைந்திருக்கும் சமுதாயம், இடம், அமைக்கப்பட்ட காலம் ஆகியவற்றைப் பொறுத்து இந்துக் கோயில்கள் பல்வேறு அமைப்புக்களில் காணப்படுகின்றன. எனினும் சில அடிப்படையான அமைப்புக்கள் எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ளன.

வகைப்பாடு

[தொகு]

இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.[1]

  • தைவிகம் - தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது.
  • ஆசுரம் - அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது.
  • ஆர்ஷம் - ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது.
  • மாநுஷம் - மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது.

புத்த கோயில்கள்

[தொகு]
புத்த காயாவில் உள்ள மகாபோதி கோயில் தொகுதி.

மரபுவழியான புத்த கோயில்கள், மனிதருக்கு உள் மற்றும் வெளி அமைதியைக் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப் படுகின்றன. பௌத்தம் இறைவனைப் பற்றிப் பேசுவதில்லை ஆயினும், பௌத்த சமயத்தின் சில பிரிவுகள் கௌதம புத்தரைப் புத்த கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். தாதுகோபுரம், அரச மரம், படிம வீடு, துறவிகள் மடம் போன்ற கூறுகள் புத்த கோயில்களில் காணப்படுகின்றன. இத் தாதுகோபுரங்களில் கௌதம புத்தரின் பல், எலும்பு போன்ற சின்னங்கள் வைக்கப்படுகின்றன.

புத்த மதம் தோன்றிய இந்தியாவில் இன்று அம் மதம் அருகி விட்டாலும், இந்தியாவுக்கு வெளியே அது ஒரு பாரிய மதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்த மதம் பெரும்பான்மை மதமாக இருந்து வருகிறது. இதனால் அந் நாடுகளிலும், அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறு பல நாடுகளிலும் புத்த கோயில்கள் உள்ளன.

உலகின் மிகப்பெரிய தாதுகோபுரங்களைக் கொண்ட புத்த கோயில்கள் சில இலங்கையில் உள்ளன. அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக் கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்த கோயில் ஒன்றில் உள்ளது.

சமணக் கோயில்கள்

[தொகு]
இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள சமணக் கோயில் ஒன்று.

சமண சமயம் அல்லது ஜைன மதம் என அழைக்கப்படும் மதம் ஒரு காலத்தில் இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. இம் மதம் செல்வாக்கிழந்த போது சமணக் கோயில்கள் பல அழிக்கப்பட்டு விட்டன. இன்று இந்தியாவில் சிறு அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர்.

சமணக் கோயில்களில் தீர்த்தங்கரர்கள் எனப்படும் மதப் பெரியார்களின் உருவங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற சமணக் கோயில்கள் இந்தியாவில், பலித்தானா, சங்கேஸ்வர், சிக்கார்ஜி, வத்தமான், மும்பாய், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை தேவதைகளின் உருவங்களைக் கொண்ட சிற்பவேலைகளினால் அழகூட்டப்படுகின்றன. சமணக் கோயில்களின் முதன்மை அறையில், பர்ஷ்வாநாதர், ரிஷபதேவர், மகாவீரர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில்கள் சமணம் தொடர்பான மிக அழகிய யாத்திரைத் தலம் எனச் சொல்லப்படுகின்றது.

சீக்கியக் கோயில்கள்

[தொகு]
பொற்கோயில் எனப்படும் ஹர்மந்திர் சாகிப்

சீக்கிய மதக் கோயில்கள் பொதுவாக குருத்துவாரா எனவே அழைக்கப்படுகின்றன. இச் சொல் பஞ்சாபி மொழியில் குருவுக்கான வாயில் என்னும் பொருள் கொண்டது. எனினும் கோயில் என்ற சொல் சீக்கிய மதக் கோயில்களுக்கும் பரவலாக வழங்கப்படுவது உண்டு. சீக்கியக் கோயில்களில் உருவங்கள் வைத்து வணங்கப்படுவது இல்லை. சீக்கிய மதத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுடைய மிகப் புனிதமான கோயிலும் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் (அம்ரித்சார்) என்னும் நகரில் அமைந்துள்ளது. ஹர்மந்திர் சாகிப் என்னும் பெயர் கொண்ட இக் கோயில் பொதுவாகப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது.

சீக்கியக் கோயில்களுக்குள் பிற மதத்தினரும் அநுமதிக்கப்படுகின்றனர். எனினும், உட் செல்லும் எவரும் காலணிகளைக் கழற்றிவிட்டு, கைகழுவித் தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்தே செல்ல முடியும்.

கிறித்தவக் கோயில்கள்

[தொகு]
வத்திக்கான் நகரின் புனித பேதுரு பேராலயம்

கிறித்தவர்கள் தங்களின் வழிபாட்டு இடங்களை சர்ச் என அழைப்பர். கிறித்த சர்ச்க்குள் பிற மதத்தினரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் திருவருட்சாதனங்களில் குறிப்பாக நற்கருணை விருந்தில் பங்கு பெற முடியாது. எல்லா கிறித்தவ ஆலயங்களும் குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு புனிதரோ அல்லது இயேசு கிறித்துவின் பெயராலோ தந்தையாம் கடவுளுக்கே அர்பணிக்கப்பட்டதாகும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

விளக்கக் குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வேம்பத்தூர் கிருஷ்ணன் எழுதிய “ஆலய மணிகள்” நூலின் பக்கம்- 47.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோயில்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோயில்_(வழிபாட்டிடம்)&oldid=3487651" இலிருந்து மீள்விக்கப்பட்டது