உள்ளடக்கத்துக்குச் செல்

குபேர குசேலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குபேர குசேலா
இயக்கம்ஆர். எஸ். மணி
பி. எஸ். இராமையா
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
எஸ். கே. மொஹ்தீன்
கதைபி. எஸ். இராமையா
இசைகுன்னக்குடி வெங்கட்ராம ஐயர்
என். எஸ். பாலகிருஷ்ணன்
நடிப்புபி. யு. சின்னப்பா
பாபநாசம் சிவன்
பி. எஸ். கோவிந்தன்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராஜகுமாரி
டி. ஏ. மதுரம்
வெளியீடுசூன் 14, 1943
நீளம்17010 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து, பி. எஸ். இராமையா இப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதியிருந்தார்.[1][2][3][4][5]

கதைச்சுருக்கம்

[தொகு]

இருபத்தேழு குழந்தைகளுடன் பரம ஏழையான குசேலர் (பாபநாசம் சிவன்) தன்னுடன் சிறுவயதில் ஒரே குருவிடம் கல்விபயின்ற கிருஷ்ணரிடம் (பி. எஸ். கோவிந்தன்) போனார். கிருஷ்ணர் அவருக்கு குபேர வாழ்க்கையை அளித்தார். உலகம் குசேலரை பூலோக குபேரன் என்று புகழ்ந்தது. குசேலர் மனைவி சுசீலையின் (எஸ். ஆர். ஜானகி) மனதில் கர்வம் பிறக்கிறது. கிருஷ்ணரின் பூஜையையே அலட்சியம் செய்கிறாள். அதே சமயம் செல்வத்தின் அதிதேவதையான குபேரனுக்கும் (டி. பாலசுப்பிரமணியம்) ஆத்திரம் வருகிறது. அவன் தன் கையாளான குண்டலகேசரியை (எல். நாராயணராவ்) குசேலரை பாதாள உலகத்திற்கு அழைத்து வரும்படி அனுப்புகிறான். பாதாளகேது (ஆர். பாலசுப்பிரமணியம்) என்ற அசுரனைத் தூண்டிவிட்டு குசேலனைக் கொல்லவும், கிருஷ்ணனுக்கு புத்தி கற்பிக்கவும் தானே புறப்படுகிறான்.[6][7]

இவற்றை எல்லாம் அறிந்த கிருஷ்ணன் பாதாளலோகத்திற்குப் போய் அசுரர்களின் குலதெய்வமான பாதாளபைரவி ரூபத்தில் தோன்றி ஒரு மாலையிலிருந்து மல்லிகா (டி. ஆர். ராஜகுமாரி) என்ற அழகிய பெண்ணைப் படைக்கிறான். அவளைப் பாதாளகேதுவின் மகளாக அவனிடம் விட்டுவிட்டு மறைகிறான்.[6]

பாதாளகேதுவிடம் குசேலரைப் பிடித்து பைரவிக்கு பலி கொடுக்கும்படி தூண்டிவிட வந்த குபேரன் மல்லிகாவைச் சந்தித்து அவள் மேல் காதல் கொள்கிறான். குண்டலகேசரி ஒரு வைத்தியன் வேடத்துடன் குசேலரிடம் போய் அவர் மனதைக் கலைத்து, அவருக்குக் காயகல்பம் கொடுத்து இளைஞனாக்குகிறான். இளைஞரான குசேலர் (பி. யு. சின்னப்பா) மனதில் ஆசையைத் தூண்டிவிடுகிறான். அவர் மூன்று உலகத்தையும் அடக்கியாள வேண்டுமென்கிறான். அதற்காக பாதாளபைரவியிடம் வரம் வாங்கலாமென்று அவரைப் பாதாளத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறான்.[6]

குசேலரைப் பாதாளகேது பலியிடுவதற்கு முன் மல்லிகா அவரை நந்தவனத்தில் சந்தித்து அவரிடம் காதல் கொள்கிறாள். அதனால் அவரைப் பலியிட முயலும்போது அதைத் தடுக்க முயலுகிறாள். ஆனால் பாதாளகேது பிடிவாதமாகப் பலியிடப் போகும்போது கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்து குசேலரைக் காப்பாற்றுகிறான்.[6]

குசேலர் மல்லிகாவின் காதலைப் புறக்கணிக்கிறார். மல்லிகா ஒரு சாகசம் செய்து அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்துச் செல்லுகிறாள். அங்கே ஒரு நாடகம் நடத்திக் குசேலர் மன உறுதியைக் கலைத்துத் தனக்கு மாலையிடும்படி செய்கிறாள். குசேலர் இப்போது அவள் மோகவலையில் விழுகிறார். குண்டலகேசரி செய்த தந்திரத்தில் குசேலர் மல்லிகாவை உதறித் தள்ளி விட்டு வரம் வாங்கக் கோவிலுக்கு ஓடுகிறார். குபேரன் குசேலர் வேடத்தில் (ஈ. கிருஷ்ணன்) வந்து மல்லிகாவை நந்தவனத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அவளைக் கொன்று விடுகிறான். குசேலன் தான் அவளைக் கொன்றாரென்றும் பாதாளகேதுவை நம்பவைக்கிறான். பாதாளகேது குசேலரை அவர்கள் தேசவழக்கப்படி உடன்கட்டையேற்ற உத்தரவிடுகிறான். முடிவில் கிருஷ்ணனின் திருவிளையாடலில் குசேலனும், மல்லிகாவும் இணைகின்றனர்.[6]

நடிகர்கள்

[தொகு]
குபேர குசேலா நடிகர்கள்
நடிகர் பாத்திரம்
பி. யு. சின்னப்பா குபேர குசேலர்
பாபநாசம் சிவன் பக்த குசேலர்
டி. பாலசுப்பிரமணியம் குபேரன்
பி. எஸ். கோவிந்தன் கிருஷ்ணன்
ஆர். பாலசுப்பிரமணியம் பாதாளகேது
என். எஸ். கிருஷ்ணன் அஸ்வினி
டி. ஆர். ராமசாமி பரணி
எல். நாராயணராவ் குண்டலகேசி
டி. எஸ். துரைராஜ் பூசாரி
பி. ஜி. குப்புசாமி சீடை
ஈ. கிருஷ்ணன் கள்ள குசேலர்

நடிகைகள்

[தொகு]
குபேர குசேலா நடிகைகள்
நடிகை பாத்திரம்
டி. ஆர். ராஜகுமாரி மல்லிகா
எம். கே. மீனலோஜனி ருக்மணி
எஸ். ஆர். ஜானகி சுசீலை
டி. ஏ. மதுரம் மாலதி
டி. வி. ஏ. பூரணி ரம்பா
பேபி சுப்புலட்சுமி சதயம்

இவர்களுடன் டி. ஏ. ஜெயலட்சுமி, கே. ஆர். ஜெயலட்சுமி, ஏ. கே. காந்தாமணி, டி. எஸ். ராஜம்மா, கே. எஸ். சரோஜினி, டி. கமலா, ஜே. கன்னியம்மா, நாகரத்தினம் ஆகியோரும் நடித்தனர்.[6]

பணிக்குழு

[தொகு]
குபேர குசேலா பணிக்குழுவினர்[6]
பணி பணிக்குழு
கதை, வசனம் பி. எஸ். ராமையா
பாட்டுகள் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி
இசை குன்னக்குடி வெங்கட்ராமையர், என். எஸ். பாலகிருஷ்ணன்
இசைக்குழு கே. வி. நாயுடு குழு
பின்னணி இசை எஸ். வி. வெங்கட்ராமன், ஜி. ராமநாதன்
இயக்கம் ஆர். எஸ். மணி, பி. எஸ். ராமையா
நடனம் மாயவரம் வி. பி. ராமையா பிள்ளை
படத்தொகுப்பு டி. ஆர். கோப்ய், கே. எல். கோவிந்தராஜன்
ஒலிப்பதிவு டி. டி. அரசு
ஒலித்தொகுப்பு டின்சா தெகுரானி
தொழிநுட்ப மேற்பார்வை ஜித்தன் பானர்ஜி
தயாரிப்பு எம். சோமசுந்தரம், எஸ். கே. மொய்தீன்
கலையகம் நியூடோன் ஸ்டூடியோ

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். குன்னக்குடி வெங்கடராம ஐயர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.[6]

குபேர குசேலா பாடல்கள்
எண் பாடல் பாடியோர் இயற்றியவர் இராகம்-தாளம்
1 சரணாகம்புஜம் துணை பிராண நாதா எம். கே. மீனலோசனி பாபநாசம் சிவன் சுத்தசாவேரி - ஆதி
2 கண்ணா (3) கருணை செய் கமலக் கண்ணா பாபநாசம் சிவன் பாபநாசம் சிவன் காப்பி - ஆதி
3 மாலை போதாதோ பி. எஸ். கோவிந்தன் பாபநாசம் சிவன் காம்போதி - ஆதி
4 செல்வமே சுகஜீவாதாரம் பி. யு. சின்னப்பா உடுமலை நாராயணகவி சாமா, ரஞ்சனி
5 நீ மயங்குவதேனோ வீணே பி. எஸ். கோவிந்தன் பாபநாசம் சிவன் குந்தலவராளி - ரூபகம்
6 வசந்தன் பவனி வருவது பார் டி. ஆர். ராஜகுமாரி பாபநாசம் சிவன் ஆரபி - ஆதி
7 நடையலங்காரம் கண்டேன் பி. யு. சின்னப்பா உடுமலை நாராயணகவி கரகரப்பிரியா - ஆதி
8 யாரென்று நீ சென்றறிந்து வா பாங்கி டி. ஆர். ராஜகுமார் பாபநாசம் சிவன் சங்கராபரணம் - ரூபகம்
9 ஆண்டருள் ஜகதம்பா யானுன் அடிமையல்லவோ பி. யு. சின்னப்பா உடுமலை நாராயணகவி கதனகுதூகலம் - ரூபகம்
10 மாய்கையாலே மதிமறந்தாயோ எல். நாராயணராவ் உடுமலை நாராயணகவி -
11 வானுலாவு தேவராதி மானிடர் பணி நாடகம் உடுமலை நாராயணகவி -
12 மாதவமேது செய்தேனோ டி. ஆர், ராஜகுமாரி, பி. யு. சின்னப்பா உடுமலை நாராயணகவி இந்துத்தான்
13 என்னை விட்டெங்கே சென்றீர் டி. ஆர். ராஜகுமாரி பாபநாசம் சிவன் அரிகாம்போதி - ஆதி
14 அங்குமிங்கு மெங்குமே நிறைந்தவா பாபநாசம் சிவன் பாபநாசம் சிவன் பிகாக் - ஆதி
15 மணம் கமழ்ந்திடு பூவே என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் கதம்பம் கலவை
16 ஆதிபராபரியே சக்தி அவதாரமானவளே டி. எஸ். துரைராஜ் - -
17 ஓங்கார ரூபிணி மந்த்ர உச்சாடணி டி. எஸ். துரைராஜ் - -

வரவேற்பு

[தொகு]

இரண்டாம் உலகப் போர்க் கால உச்சத்தில் இத்திரைப்படம் வெளியானது. போர் வீரர்கள் சென்னை நகர வீதிகளில் விசையுந்துகளிலும், இராணுவக் கவச வாகனங்களிலும் பவனி வந்து கொண்டிருந்த காலம். அவர்களைக் கவருவதற்காக, இத்திரைப்படத்துக்கான வீதி விளம்பரங்களில் யார் பணக்காரர்? குபேரனா, குசேலரா? திரைப்படத்தைப் பாருங்கள் என ஆங்கிலத்தில் மட்டும் அச்சிட்டு வெளியிட்டிருந்தார்கள்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இளங்கோவன் டைரக்டர் ஆனார்: சோமுவுடன் இணைந்து மஹாமாயாவை இயக்கினார்". கட்டுரை. மாலை மலர். 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2018.
  2. 2.0 2.1 Randor Guy (11 September 2009). "Kubera Kuchela 1943". "தி இந்து". பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  3. http://tamilrasigan.com/kubera-kuchela-1943-tamil-movies-online-watch-free/
  4. "DUV". indiancine.ma. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.
  5. "Kubera Kuchela". moviebuff. பார்க்கப்பட்ட நாள் 2016-04-20.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 குபேர குசேலா பாட்டுப் புத்தகம். சென்னை: Caxton Press. 1943.
  7. அறந்தை நாராயணன் (நவம்பர் 10 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-8 மணிக்கொடி பி.எஸ்ராமையா". தினமணி கதிர். 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குபேர_குசேலா&oldid=3719391" இலிருந்து மீள்விக்கப்பட்டது