உள்ளடக்கத்துக்குச் செல்

உருவ அழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உருவ அழிப்பு (Iconoclasm) என்பது சமயம் அல்லது அரசியல் நம்பிக்கை காரணமாக படங்கள், படிமங்கள் (statues) ஆகியன அழிக்கப்படுதலைக் குறிக்கும். ஒரு சமயத்தில் (religion) உள்ளவர்கள் வேறொரு சமயத்தில் உள்ள கடவுள் உருவங்களை அழிக்கலாம். அல்லது, ஒரு சமயத்துக்குள்ளேயே ஒரு சாரார் மற்றவர்களை எதிர்த்து இது போன்ற அழிவுகளைச் செய்யலாம். எடுத்துக் காட்டாக, கிறிஸ்துவ சமயத்தில், இறைவனுடைய பத்துக் கட்டளைகளை (Ten Commandments) அப்படியே எடுத்துக் கொள்வதால், அது உருவ அழிப்பைத் தூண்ட காரணமாகிறது என்று வாதிடப் படுகின்றது.[1] ஒரு காலத்தில் கிறிஸ்துவர்கள் யூதர்களை உருவ அழிப்பு செய்பவர்கள் என்று கூறிவந்தனர்.[2] கிறிஸ்துவ சமயத்தில் பல பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உருவ அழிப்பு என்பது வெவ்வேறு வகையாகப் பார்க்கப் படுகின்றது. மொத்தத்தில், கிறிஸ்துவ சமயத்தில் உருவ அழிப்பு என்பது இசுலாம் சமயத்தில் இருப்பதைவிட குறைவாக இருப்பதாகவே கருதப் படுகின்றது.[3] இசுலாம் மதத்திலும், அதில் உள்ள சியா (Shiya), சுன்னி (Sunny) என்ற இரு பிரிவுகளில், சியா (Shiya) என்ற பிரிவினரைவிட சுன்னி (Sunny) என்ற பிரிவினருக்கே உருவ அழிப்பு கருத்து வலிமையாக இருக்கிறது என்றும் கருதப் படுகிறது.

சமய தொடர்பான உருவ அழிப்பு (Religious iconoclasm)

[தொகு]

பழங்காலம்

[தொகு]
அமூன்என்ற கடவுளர் சிற்பத்தை, அக்கெனதென் என்ற எகிப்திய பார்வோனால் அழித்து மறைக்கப்பட்டது (கி.மு 3300)

எகிப்தில், வெண்கலக் காலம் (கி.மு 3300– கி.மு 1200) என்று சொல்லப்படும் காலத்தில், அக்கெனதென் என்ற அரசன் ஆட்சியில், புது வகையான கலையைக் கொண்டு வருவதாகக் கூறப்பட்டு, அங்கிருந்த பழைய அமூன் போன்ற கடவுள்களின் கோவில்களும், முன்னோர் நினைவுக் கூடங்களும் இடித்துத் தள்ளப்பட்டன. அப்போது மக்களால் பெரிதும் வணங்கப்பட்ட அமூன் என்ற கடவுளின் படிமங்கள், கல்வெட்டுகளில் பதிந்திருந்த அனைத்துக் குறிப்புக்கள், இன்ன பிற கடவுளர்களின் படிமங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன. கோவில் கூடங்களின் சுவர்கள், கல்லறைகள் மீது வரையப்பட்ட அமுன் படங்கள் யாவும் அழிக்கப்பட்டு, ஆட்டன் (Aton) என்று அழைக்கப்பட்ட சூரியக் கடவுள்தான் உண்மையானக் கடவுள் என்று கூறப்பட்டது. அஃகேனத்தன் இறப்புக்குப் பிறகு, அவனைப் பற்றிய குறிப்புகள் பல அழிக்கப்பட்டன.

பைசாந்திய உருவ அழிப்புக் காலம்

[தொகு]
பைசாந்திய உருவ அழிப்பு [4]

உரோமானியப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின் பைசாந்தியப் பேரரசு (Byzantine Empire) (கி.பி. 395 - கி.பி. 1453) நிறுவப் பட்டது. இந்தப் பேரரசில் தோன்றிய பல மன்னர்களுள் ஒருவரான மூன்றாம் லியோ, அதாவது லியோ III , ஆட்சியில் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு உருவ வழிபாடு கூடாது என்ற கட்டுப்பாட்டைச் செயல் படுத்தியது. இதனால் சமுதாயத்தில் அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் தோன்றின; இது மக்களிடையே பிரிவுக்கும் வழி வகுத்தது.[5][6]

கிறிஸ்துவ சமயத்தில் சீர்திருத்தக் காலம்

[தொகு]
16-ஆம் நூற்றாண்டு உருவ அழிப்பு.கிறிஸ்துவ சமயச் சீர்திருத்தத்தின் தாக்கம்..

கிறிஸ்துவ மதத்தின் ஒரு பிரிவான சீர்திருத்தத் திருச்சபை (Protestantism)-ஐச் சேர்ந்த ஆண்டிரியாஸ் காரல்ஸ்டட் (Andreas Karlstadt) (கி.பி.1486 - கி.பி. 1541, சுவிட்சர்லாந்து), அல்ரிச் சுவிங்லி (Huldrych Zwingli) (கி.பி.1484 - கி.பி.1531, சுவிட்சர்லாந்து), ஜான் கால்வின் (John Calvin) (கி.பி.1509 - கி.பி.1564, பிரான்சு) ஆகியோர் கடவுளர் படிமங்கள், படங்கள் போன்றவை இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.[7] இதன் காரணமாக, கடவுள் படிமங்கள், படங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன.

1529-இல் பாசல் (Basel), 1523-இல் சூரிக் (Zurich), 1530-இல் கோபனேகன் (Copenhagen) , 1534-இல் மன்ஸ்டர் (Münster), 1535-இல் ஜெனீவா (Geneva), 1537-இல் ஆக்சுபர்க் (Augsburg ), 1559-இல் ஸ்காட்லாந்து (Scotland),1560-இல் ரூவன் (Rouen), 1562-இல் செயிண்டஸ் (Saintes) ஆகிய இடங்களில், பேரளவுக்கு உருவ அழிப்புப் போராட்டங்கள் நடந்தன.[8][9]

இசுலாமிய உருவ அழிப்பு

[தொகு]

இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, காபா (Kaaba) (மெக்கா, சவூதி அரேபியா) என்ற இசுலாமிய இறைக் கூடத்தில் இருந்த கடவுள் படிமங்களை நீக்கியது மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப் படுகின்றது. இசுலாம் சமயத்தில், உருவ அழிப்புகள் வன்முறையைப் பயன் படுத்தி செய்வதாகவே மேலைநாட்டு உரை ஆசிரியர்கள் கருதியுள்ளார்கள்.[10]

அரேபியாவில் இசுலாம் தொடங்கிய காலம்

[தொகு]

கி.பி.630-இல் அரேபிய நாட்டைச் சேர்ந்த மெக்காவில் இருந்த கடவுளர் படிமங்கள், படங்கள் ஆகியன அழிக்கப் பட்டன. ஆயினும், இயேசு கிறிஸ்து, அவருடைய தாயாராகக் கருதப்படும் அன்னை மேரி ஆகியோருடைய படிமங்கள், படங்கள் விலக்கு அளிக்கப்பட்டு, காக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.[11] கி.பி. 722-இல், மன்னர் உமையத் காலிப் (இறைத்தூதர் முகம்மது நபி அவர்களின் வழித்தோன்றலாகக் கருதப் படுபவர்) ஆட்சிக் காலத்தில், அவர் நாட்டில் இருந்த கிறிஸ்துவ படங்கள், சிலுவைகள் ஆகியன அழிக்கப் பட்டன.[12] மேலும் அப்போது அவர் ஆட்சியின் கீழ் இருந்த ஜோர்டான் (Jordan) போன்ற நாடுகளில் கிறிஸ்துவக் கூடங்களில் புதைக்கப் பட்டிருந்த சிலுவைப் படங்கள் வரைந்த பளிங்குக் கற்கள் பலவும் தோண்டி எடுக்கப் பட்டு அழிக்கப் பட்டன.[13]

எகிப்து

[தொகு]
முகம் உடைந்த ஸ்பிங்ஸ் (கி.பி.2010)

எகிப்து நாட்டில் உள்ள பழங்கால ஸ்பிங்ஸ் (Great Sphinx of Giza), மனிதத் தலையும் அரிமா (lion) உடலும் கொண்ட கல்லில் செதுக்கப் பட்ட ஒரு படிமம் (கி.மு. 2558 – கி.மு. 2532) ஆகும். இந்த படிமத்தின் முகத்தை கி.பி. 1300-இல் ஒரு இசுலாமியர் (Sufi Muslim) உடைத்து அழித்ததாகக் கூறப் படுகின்றது.[14]

இசுலாமியர் படை எடுப்புகள்

[தொகு]
அஃகியா சோபியா கிறிஸ்துவக் கோவில்: கி.பி. 1453-இல் கிறிஸ்துவ திருச்சபை (church) இசுலாமிய பள்ளிவாசலாக மாற்றப் பட்டது

இசுலாமியர் மற்ற நாடுகளின் மீது படை எடுத்த போது, அந்த நாடுகளில் உள்ள கோவில்களைப் பள்ளிவாசல்களாக (mosques) மாற்றினர். எடுத்துக் காட்டாக, இன்று இசுதான்புல் (Istanbul) என்று சொல்லப் படும் துருக்கி நாட்டின் தலைநகரம் , கி.பி. 1453-உக்கு முன்பு கான்ஸ்டண்டினோபில் (Constantinople) என்று அழைக்கப் பட்ட கிறிஸ்துவ (Eastern Orthodox) நகரமாக இருந்தது. கி.பி. 1453-இல், ஆட்டமான் பேரரசைச் (Ottoman Empire) சேர்ந்த இரண்டாம் முகமது (Mehmed II, Mehmed the Conqueror) என்ற இசுலாமிய அரசர், கான்ஸ்டண்டினோபில் மீது படை எடுத்து வென்ற போது, அந்த நகரத்தில் இருந்த அஃகியா சோபியா (Hagia Sophia) என்ற புகழ் பெற்ற கிறிஸ்துவ திருச்சபை (church) இசுலாமிய பள்ளிவாசலாக மாற்றப் பட்டது. அத் திருச்சபையில் இருந்த கோவில் மணிகள், மிசைப் பலகைகள், இயேசு, மேரி ஆகியோர் தம் படங்கள் செதுக்கிய பளிங்குக் கற்கள் ஆகியன அழிக்கப் பட்டன.[15] அந்த இடங்களில், இசுலாமிய வடிவங்களான, மெக்கா திசை குறிக்கும் திசை மாடங்கள் (mihrabs), சமய சொற்பொழிவு நடத்தும் இடங்களான உரை மாடங்கள் (minbars), அழைப்பு மாடங்கள் (minarets) ஆகியன அமைக்கப் பட்டன.

அண்மைக்கால உருவ அழிப்பு

[தொகு]
இடது: 1963-இல் புத்தர் சிலை. வலது:2001-இல் சிலை உடைக்கப்பட்ட பிறகு.

2011-இல், தாலிபான் இயக்கத் தலைவரான முல்லா முகமது உமர் (Mullah Mohammed Omar) அவர்களின் ஆணையின் பேரில், கி.பி. 507-இல் உருவாக்கப்பட்ட புத்தர் சிலை (பாம்யன், ஆப்கானித்தான்) வெடி குண்டுகள் வைத்து உடைக்கப் பட்டது. 2012-இல், அன்சார் தின் (Ansar Dine) என்பவரால், மாலி என்ற நாட்டில் உள்ள திம்பக்து (Timbuktu, Mali) என்ற நகரத்தில் இருந்த 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல சுபி இறைத் தலங்கள் (Sufi shrines) அழிக்கப் பட்டன.[16] ஐசில் (ISIL – Islamic State of Iraq and the Levant) என்ற இசுலாமிய அமைப்பு ஈராக் நாட்டில் இருந்த தேவ தூதர் யூனஸ் (Prophet Yunus) திருக்கோயில், தேவ தூதர் சேத் (Seth) (ஆதாம் ஏவாளின் மூன்றாம் மகன்) அவரின் அருள் தலம் ஆகியனவற்றை 2014-இல் குண்டு வைத்து தகர்த்தது.[17][18]

ஏனைய உருவ அழிப்புகள்

[தொகு]
  • யூதர்கள் முதன் முறையாக, "கடவுள் கொடுத்த மண்" என்று அவர்களால் கருதப்படும் இசுரேலுக்கு வந்த போது, அங்கு வாழ்ந்து கொண்டிருந்த கானான் (Canaan) நாட்டைச் சேர்ந்த கானானியர் வணங்கி கொண்டிருந்த கடவுளர்களின் படிமங்கள் அனைத்தையும், யூதர்கள் அழிக்குமாறு கடவுள் சொன்னதாக விவிலியம் சொல்லப் பட்டுள்ளது.[19]
  • யூதர் நாட்டை (king of Judah) அரசாண்ட எசக்கியா (Hezekiah) (கி.மு. 715), தன் ஆட்சி காலத்தில், எருசலத்திலும் (Jerusalem) இசுரேலிலிலும் இருந்த எல்லா உருவங்களையும் அப்புறப் படுத்தினான் என்று விவிலியத்தின் ஒரு பகுதியான அரசர்களின் நூல்கள் (Books of Kings) கூறுகின்றது.
  • கான்ஸ்டடைன் (Constantine) (கி.பி.306 - கி.பி.337) என்ற உரோமப் பேரரசர் ஆட்சிக் காலத்தில், அவர் நாட்டில் இருந்த ஒரு சில கிறிஸ்துவ அமைப்புகள், உரோமானிய காலத்து கடவுளர்கள் படிமங்கள், படங்கள் ஆகியனவற்றை அழித்தன.
  • தென் கொரியாவில் உள்ள ஒரு சில கிறிஸ்துவ அமைப்புகள், 1990-2000-இல், பல இடங்களில் இருந்த புத்தர் சிலைகளையும், கோவில்களையும் இடித்துத் தள்ளின. அதன் பிறகும் கூட, பல இடங்களில் புத்தர் சிலைகள் உருவ மாறுதல்கள் செய்யப் பட்டன.[20]

அரசியல் உருவ அழிப்பு

[தொகு]
உரிமையின் மைந்தர்கள (Sons of Liberty) இங்கிலாந்து அரசரான மூன்றாம் ஜார்ஜ்-இன் சிலையை நியூயார்க் நகரத்தில் அழித்தல்(1776).

தனியர் உருவ அழிப்பு

[தொகு]

தனியர் உருவ அழிப்பு (Damnatio memoriae) என்பது தனிப்பட்ட ஒருவரின் உருவச் சிலைகளையும் படங்களையும் குறிவைத்துத் தாக்கி அழிப்பதாகும். எடுத்துக் காட்டாக, உரோமாபுரி அரசர்களான டமிஷன் (Domitian) (கி.பி.81-96), கமோடஸ் (Commodus) (கி.பி. 177-192) ஆகியோர் தங்கள் சிலைகளை நாடு முழுவதும் பல இடங்களில் வைத்துக் கொண்டனர். அவர்கள் மறைவுக்குப் பிறகு அந்தச் சிலைகள் எல்லாம் இடித்துத் தள்ளப் பட்டன. இது ஒருவகையான தனியர் உருவ அழிப்பு ஆகும்.

பிரெஞ்சுப் புரட்சியில் உருவ அழிப்பு

[தொகு]

பிரெஞ்சுப் புரட்சி நேரத்தில், அரசாங்க அதிகாரிகளும் பொது மக்களில் பலரும் உருவ அழிப்புக்குத் துணை நின்றனர். எண்ணற்ற நினைவுக் கூடங்கள், சமயக் கூடங்கள், வரலாற்றுக் கட்டிடங்கள் ஆகியன அழிக்கப் பட்டன. 15-ஆம் உலூயி (Louis XV) (15 பிப்ரவரி 1710 – 10 மே 1774) என்ற மன்னரின் (பாரிஸ் வளாகத்தில் வைக்கப் பட்டிருந்த) சிலை உடைத்துச் சாய்க்கப் பட்டது. இதற்குப் பிறகு கில்லட்டின் (Guillotine) என்ற பொறி பயன்படுத்தப் பட்டு மரண தண்டனைகள் நிறைவேற்றப் பட்டன. வென்டோம் (Place Vendôme) என்ற இடத்தில் இருந்த நெப்போலியனின் சிலை பல முறை அழிக்கப்பட்டு, பின் நிறுவவும் பட்டன.

இந்தியாவில் இசுலாமியர் உருவ அழிப்பு

[தொகு]

இசுலாமியர் படையெடுப்பு வட இந்தியாவில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு தொடக்கம் நடந்தது. ஈராக் நாட்டில் ஆளுநராக இருந்த ஹஜாஜ் (Al-Hajjaj ibn Yusuf) (கி.பி.661-714), முகமது பின் காசிம் (Muhammad bin Qasim) என்ற படைத் தலைவரின் கீழ் அனுப்பிய 6000 வீரர்கள் கொண்ட படை, தெபால் (Debal, கராச்சி , பாக்கிஸ்தான்) என்ற துறை முகத்தை நோக்கிச் சென்று, அங்கிருந்த சிந்து (Sindh) படை வீரர்களைக் கொன்று மற்றவர்களைத் தம் அடிமை ஆக்கியது. பேரளவிலான ஜாட் (Jat) இனத்தைச் சேர்ந்த மக்கள் சிறை பிடிக்கப் பட்டு ஈராக் நாட்டிற்கு அடிமைகளாகக் கடத்திச் செல்லப் பட்டனர்.[21] எண்ணற்ற கோவில்களும் இடிக்கப் பட்டு தரை மட்டமாக்கப் பட்டன. வரலாற்று ஆசிரியர் உபேந்திர தாக்கூர் (Upendra Thakur) கூற்றுப் படி:

வெற்றி பெறும் பெருமிதத்தோடு நாட்டிற்குள் (வட இந்தியா) நுழைந்த முகமது (முகமது பின் காசிம்), தெபால் (Debal), சேஷ்வான் (Sehwan), நேருன் (Nerun), பிரமநாதபாத் (Brahmanadabad), அலோர்(Alor), முல்தான் (Multan) ஆகிய நகரங்களை ஒன்றன் பின் ஒன்றாக வென்று, ஒன்றரை ஆண்டுகளுக்குள், வட இந்திய அரசுகள் பலவற்றை அழித்தார். அச்சத்தால் [மக்களாலேயே] பல கோவில்கள் அழிக்கப் பட்டன. தெபால், நேருன், அலோர் ஆகிய நகரங்களிலில் இருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, இசுலாமிய பள்ளிவாசல்களாக மாற்றப் பட்டன.[22]


  • குஜராத்தில் உள்ள சோமநாதபுரம் சோமநாதர் கோயில் (Somnath Temple) பல முறை இசுலாமியர்களால் அழிக்கப்பட்டும் பிறகு இந்துக்களால் கட்டப்பட்டும் வந்தது.[23]
  • காசி விசுவநாதர் கோயில், (Kashi Vishwanath Temple) குத்புத்தீன் ஐபக் என்பவரால் அழிக்கப்பட்டது.
  • மார்தாண்ட சூரியன் கோயில்: சிக்கந்தர் புட்சிகான் (Sikandar Butshikan) என்ற முசுலீம் சுல்தான், 15-ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயிலை இடித்து அழித்தார். அழிவு வேலை நடந்து முடிவதற்கு ஓராண்டுக் காலம் ஆயிற்று.
  • முசுலீம் படைத் தலைவர் மாலிக் கபூர் (Malik Kafur) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை, தில்லியில் இருந்து படையுடன் வந்து தாக்கி, அழிவுகளை உண்டாக்கி, செல்வத்தைக் கவர்ந்து சென்றார்.
  • காகதீய கலைத்தோரணம் (வாரங்கல் நுழை வாசல்) காகதீய பேரரசால் கட்டப் பட்டது. தில்லி சுல்தானகம் (Delhi Sultanate) என்ற முஸ்லீம் பேரரசு இதை அழித்தது. இது 'வாரங்கல் கொள்ளை என்னும் படையெடுப்பின் போது நிகழ்ந்தது; அப்போது கோகினூர் வயிரமும் கொள்ளை அடிக்கப் பட்டு தில்லி எடுத்துச் செல்லப் பட்டது.[24]
  • இராணியின் கிணறு (Rani ki vav) என்பது ஒரு படிக்கிணறு (stepwell); குஜராத்தில் பட்டன் என்ற நகரத்தில் உள்ளது. சாளுக்கிய பேரரசால் கட்டப் பட்டது. கி.பி. 1200-1210-இல் தில்லி சுல்தானகம் என்ற முசுலீம் பேரரசைச் சேர்ந்த குத்புத்தீன் ஐபக் (Qutb al-Din Aibak அல்லது Qutb-ud-din Ayba) இந்த நகரை சூறையாடி, கி.பி. 1298-இல் அழித்தார்.[24]
  • உருத்திரர் பெரிய கோவில் (Rudra Mahalaya Temple) தூண்கள்: குஜராத்தில் பட்டன் (Patan, Gujarat) என்ற நகரத்தில் உள்ளது. இந்த கோவில் அலாவுதீன் கில்சி (Allauddin Khilji) என்ற முஸ்லீம் பேரரசரால் அழிக்கப் பட்டது.
  • உருத்திரர் பெரிய கோவில் நுழைவாயில்: குஜராத்தில் பட்டன் என்ற நகரத்தில் உள்ளது. இந்த கோவில் அலாவுதீன் கில்சி (Allauddin Khilji) என்ற முஸ்லீம் பேரரசரால் அழிக்கப் பட்டது.
  • ஹோய்சாலேஸ்வரர் கோவில் (Hoysaleswara Temple) வெளிச் சிற்பங்கள்: தில்லி சுல்தானகம் (Delhi Sultanate) இந்தக் கோவிலை இரண்டு முறை தாக்கியது.[25]

இந்திய கோவில்கள் அழிப்பு

[தொகு]

கி.பி. 725-இல், ஜுனயாத் (Junayad) என்ற சிந்துவின் ஆளுநர் இரண்டாவது சோமநாதர் கோயிலை அழிக்க தனது படையை அனுப்பினார்.[26] பின்னர், கி.பி. 1024-இல், சோமநாதர் கோவில் மீண்டும் கசினி முகமது (Mahmud of Ghazni) என்ற ஆப்கானிய அரசரால் படையெடுக்கப் பட்டு, அழிக்கப் பட்டது.[27] காஷ்மீர் நிலப் பகுதியை ஆண்ட சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் (Sultan Sikandar Butshikan) (கி.பி. 1389 – கி.பி. 1413) அங்கிருந்த அனைத்து வெள்ளி படங்கள், சிலைகள் ஆகியனவற்றை உடைத்து அழிக்கும்படி ஆணை இட்டார். பிரிஷ்டா (Firishta) என்ற பாரசீக வரலாற்று ஆசிரியர் கூற்றுப் படி, "பிராமணர்கள் வெளியேற்றப் பட்ட பிறகு, சிக்கந்தர் அனைத்து கோவில்களையும் இடிக்க வேண்டும் என்று ஆணை இட்டார். அனைத்து சிலைகளும், படங்களும் அழிக்கப் பட்ட பின்னர், அவர் உருவ அழிப்பாளர் என்ற பட்டத்தையும் பெற்றார்."[28]

சீனாவில் உருவ அழிப்பு

[தொகு]

புத்த சமயத்திற்கு எதிராக சீனாவில் பல புத்தர் கோவில்களும் சிலைகளும் அழிக்கப் பட்டன. கி.பி.845-இல், தாங் என்ற அரச பரம்பரையில் வந்த பேரரசர் உசாங் என்பவர் வெளிநாட்டில் இருந்து வரும் கருத்துத் தாக்கங்களை தடுத்து நிறுத்துவதாகக் கூறி, புத்த மதத்திற்கும், அதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் எதிராக பல நடவடிக்கை எடுத்தார். அது மட்டுமல்லாமல், சவுராட்டிரம் (Zoroastrianism), நெஸ்டோரிய கிறிஸ்துவம் (Nestorianism), மானிகீசம் (Manichaeism) ஆகியவற்றிற்கு எதிராகவும் அழிவுகளை உண்டாக்கினார். சீனாவில் குவோமிண்டாங் (Kuomintang) என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்தவரான படைத் தலைவர் பாய் சாங்சி (Bai Chongxi) , குவாங்சி (Guangxi) என்ற நிலப் பகுதியில் இருந்த புத்தர் சிலைகளையும் கோவில்களையும் இடித்து விட்டு, அவ்விடங்களில் கல்விக் கூடங்களையும் தம் கட்சி அலுவலகங்களையும் கட்டிக் கொண்டார்.[29] அங்கிருந்த புத்த துறவிகள் வாழ்ந்த இல்லங்களும் அழிக்கப் பட்டு, துறவிகள் விரட்டப் பட்டனர் என்றும் கூறப் படுகின்றது.[30]

திபெத்தின் மீது சீனா படை எடுத்து அதைச் சீனாவோடு சேர்த்துக் கொண்ட பிறகு, அங்கிருந்த பல புத்த தலங்கள் அழிக்கப் பட்டன.[31] சீனாவில் 1966 முதல் 1976 வரை நடந்த சீனப் பண்பாட்டுப் புரட்சி (Cultural Revolution)-இன் விளைவாக, பல சமய கூடங்களும், கலைக் காட்சிப் பொருட்களும், தனியார் சேர்த்து வைத்த பொருட்களும், சமயம் சாரா அமைப்புக்களும் கூட அழிக்கப் பட்டன.

கிழக்கு ஐரோப்பாவில் உருவ அழிப்புக்கள்

[தொகு]

உருசியாவில் (Russia) புரட்சியாளர் லெனின் (Vladimir Lenin) நடத்திய அக்டோபர் புரட்சி (October Revolution) முடிந்த பின், சமயக் கூடங்களும், படங்களும் அழித்தொழிக்கப் பட்டன. சார் (Tsar) மன்னர்களின் உருவப் படங்களும் அழிக்கப் பட்டன. பல உருசிய கிறிஸ்துவ கோயில்கள் , யூதர்களின் கல்லறைகள் ஆகியனவும் அரசாங்கத்தின் நேரடிப் பார்வையில் இடிக்கப் பட்டன. அது போலவே, 1956-இல் நடந்த அங்கேரியப் புரட்சியின் (Hungarian Revolution of 1956) போது ஸ்டாலின் (Joseph Stalin) அவர்களின் சிலைகளும் படங்களும் அழிக்கப் பட்டன.[32]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "You shall not make for yourself a carved image, or any likeness of anything that is in heaven above, or that is in the earth beneath, or that is in the water under the earth. 5 You shall not bow down to them or serve them ..." (Exodus 20:4–5a, ESV.)
  2. Michael, Robert (2011). A history of Catholic antisemitism : the dark side of the church (1st Palgrave Macmillan pbk. ed.). New York: Palgrave Macmillan. pp. 28–30. ISBN 978-0-230-11131-8. Retrieved 9 February 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2018-11-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-28.
  4. "பைசாந்திய உருவ அழிப்பு". பார்க்கப்பட்ட நாள் 2013-04-30.
  5. Cyril Mango, The Oxford History of Byzantium,2002.
  6. Mango, 2002.
  7. Felix, Steven (30 January 2015). Pentecostal Aesthetics: Theological Reflections in a Pentecostal Philosophy of Art and Aesthetics. Brill Academic Publishers. p. 22. ISBN 9789004291621. Luther's view was that biblical images could be used as teaching aids,and thus had didactic value. Hence Luther stood against the destruction of images whereas several other reformers (Karlstadt, Zwingli, Calvin) promoted these actions. In the following passage, Luther harshly rebukes Karlstadt on his stance on iconoclasm and his disorderly conduct in reform.
  8. Kamil, Neil (2005-02-11). Neil Kamil, Fortress of the soul: violence, metaphysics, and material life, p. 148. ISBN 9780801873904. Retrieved 2013-04-30.
  9. Wandel, Lee Palmer (1995). Voracious Idols and Violent Hands. Cambridge, UK: Press Syndicate of the University of Cambridge. p. 149. ISBN 978-0-521-47222-7.
  10. Flood, Finbarr Barry (2002). "Between cult and culture: Bamiyan, Islamic iconoclasm, and the museum". The Art Bulletin. 84 (4): 641–659. doi:10.2307/3177288. JSTOR 3177288.
  11. Guillaume, Alfred (1955). The Life of Muhammad. A translation of Ishaq's "Sirat Rasul Allah". Oxford University Press. p. 552. ISBN 978-0-19-636033-1. Retrieved 2011-12-08. Quraysh had put pictures in the Ka'ba including two of Jesus son of Mary and Mary (on both of whom be peace!). … The apostle ordered that the pictures should be erased except those of Jesus and Mary.
  12. A. Grabar, L'iconoclasme byzantin: le dossier archéologique (Paris, 1984), 155–56.
  13. King, G. R. D. (1985). "Islam, iconoclasm, and the declaration of doctrine". Bulletin of the School of Oriental and African Studies. 48 (2): 276–7. doi:10.1017/s0041977x00033346.
  14. al-Maqrīzī, writing in the 15th century, attributes the damage to Muhammad Sa'im al-Dahr, a Sufi Muslim from the khanqah of Sa'id al-Su'ada, in 1378.
  15. "Hagia Sophia Archived 5 January 2009 at the Wayback Machine." ArchNet.
  16. Tharoor, Ishaan (2012-07-02). "Timbuktu's Destruction: Why Islamists Are Wrecking Mali's Cultural Heritage". TIME. Retrieved 10 July 2012.
  17. "Iraq jihadists blow up 'Jonah's tomb' in Mosul". The Telegraph. Agence France-Presse. 25 July 2014. Retrieved 25 July 2014.
  18. "ISIS destroys Prophet Sheth shrine in Mosul". Al Arabiya News. 26 July 2014.
  19. Numbers 33:52 and similarly Deuteronomy 7:5
  20. Harry L. Wells, Korean Temple Burnings and Vandalism: The Response of the Society for Buddhist-Christian Studies. Buddhist-Christian Studies, Vol. 20, 2000, pp. 239–240; http://muse.jhu.edu/login?uri=/journals/buddhist-christian_studies/v020/20.1wells.html
  21. Wink, André (2002). Al-Hind, the Making of the Indo-Islamic World. Volume 1: Early Medieval India and the Expansion of Islam 7th-11th Centuries. Brill. ISBN 978-0-391-04173-8.
  22. Sindhi Culture by U. T. Thakkur, Univ. of Bombay Publications, 1959.
  23. Eaton (2000), Temple desecration in pre-modern India Frontline, p. 73, item 16 of the Table, Archived by Columbia University
  24. 24.0 24.1 Richard Eaton (2000), Temple Desecration and Indo-Muslim States, Journal of Islamic Studies, 11(3), pp 283-319
  25. Robert Bradnock; Roma Bradnock (2000). India Handbook. McGraw-Hill. p. 959. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-658-01151-1.
  26. "Leaves from the past". Archived from the originalon 2007-01-10.
  27. "Gujarat State Portal | All About Gujarat | Gujarat Tourism | Religious Places | Somnath Temple". Gujaratindia.com. Retrieved 2013-04-30.
  28. Firishta, Muhammad Qāsim Hindū Shāh (1981) [1829]. Tārīkh-i-Firishta [History of the Rise of the Mahomedan Power in India]. Translated by John Briggs. New Delhi.
  29. Diana Lary (1974). Region and nation: the Kwangsi clique in Chinese politics, 1925–1937. Cambridge University Press. p. 98. ISBN 978-0-521-20204-6. Retrieved 2010-06-28.
  30. Don Alvin Pittman (2001). Toward a modern Chinese Buddhism: Taixu's reforms. University of Hawaii Press. p. 146. ISBN 978-0-8248-2231-6. Retrieved 2010-06-28.
  31. Karan, P. P. (2015). "Suppression of Tibetan Religious Heritage". The Changing World Religion Map. Springer, Dordrecht. pp. 461–476. doi:10.1007/978-94-017-9376-6_23. ISBN 9789401793759.
  32. Auyezov, Olzhas (January 5, 2011). "Ukraine says blowing up Stalin statue was terrorism". Reuters. Retrieved 9 April 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருவ_அழிப்பு&oldid=4041035" இலிருந்து மீள்விக்கப்பட்டது