The fictional events narrated in Mole an English translation of Otran, a novel by Ashokamitran take place within a period of seven months, nearly all of them in the American Midwest. The narrator, a culturally rooted writer from Chennai, is transplanted amidst a motley group of fellow-writers from distant parts of the world, all of them as dangerously dislocated as him. Deprived of the language that has brought them fulfillment and distinction, these writers struggle to retain their place of precarious honour in a strange, unfamiliar and sometimes hostile environment. And in the background looms the endearing, if exasperating, landscape of twentieth-century America. Kalyan Ramans English translation illumines the subtle, spare strength of Ashokamitrans prose.
1931ம் ஆண்டு செப்டம்பர் 22ந் தேதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள சிகந்தராபாத்தில் பிறந்தவர். இயற்பெயர் ஜ. தியாகராஜன். தமது இருபத்தொன்றாவது வயதில் (தந்தையின் மறைவுக்குப் பின்) குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறி, ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றத் தொடங்கினார். அப்போது அகில இந்திய வானொலி நடத்திய ஒரு நாடகப் போட்டிக்காக "அன்பின் பரிசு" என்னும் நாடகத்தை எழுதினார். அதுவே அசோகமித்திரனின் முதல் படைப்பு. 1954ம் ஆண்டு வானொலியில் அந்நாடகம் ஒலிபரப்பானது.
அசோகமித்திரனின் முதல் சிறுகதை "நாடகத்தின் முடிவு". 1957ம் ஆண்டு கலைமகளில் இது பிரசுரமானது. கலைமகளில் அவரது இரண்டாவது சிறுகதை "விபத்து" பிரசுரமானதையடுத்து, மணிக்கொடி கி.ரா. மூலம் ந. பிச்சமூர்த்தியின் அறிமுகமும், அவர் மூலம் "எழுத்து" பத்திரிகைத் தொடர்பும் கிடைத்தது.
சுமார் நாற்பதாண்டு காலத்துக்கும் மேலாகத் தமிழின் மிக முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இலங்கை ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளின் பேரில் இலக்கியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அவரது பல படைப்புகள், பல இந்திய அயல் மொழிகளில் மொழியாக்கம் பெற்றிருக்கின்றன. அப்பாவின் சிநேகிதர்' என்கிற சிறுகதைத் தொகுப்புக்காக, அசோகமித்திரனுக்கு 1996ம் ஆண்டு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
புது இடத்திற்குப் போகும் போது ஏதோ ஒரு சாகசமோ இல்லை இதுவரை செய்யாத ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும் என்ற ஆசை அதிகம் கொள்வது ஒரு சாரர் என்றாலும் போன இடத்தில் எந்தப் பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் வந்த வேலையை முடித்து விட்டு நல்லபடியாக ஊர் போய்சேர வேண்டும் என்ற ஜாக்கிரதை உணர்வு கொண்டவர்கள் ஒரு சாரர்.இரண்டும் ஒன்றை ஒன்று சேராத பாதை என்றாலும் இரண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு புதிய ஊரின் கட்டமைப்பை ஆராய்வது பலரின் நடவடிக்கையாகிறது.
அமெரிக்கப் பல்கலைக்கழகம் அழைத்ததின் பேரில் முதல் தடவை செல்லும் கதாசிரியர் அங்கே இருக்கும் சீதோஷ்ண நிலைக்குத் தன்னை தகவமைத்துக் கொள்ளத் துவங்குவதில் இருந்து அடிப்படை தேவைகளாக இருக்கும் அனைத்திற்குமே தன்னை ஒப்புக் கொடுத்தவர் இன்னும் கொஞ்ச நாளைக்குத் தானே என்று இயல்பாக அதில் ஒன்றிப் போகிறார்.
நல்ல சாப்பாடு கிடைக்காமல் அவதிப்பட்டாலும் அதில் எந்த வித சமரசமும் செய்யாமல் தான் எவ்வகை உணவுமுறையைக் கடைப்பிடித்தேனோ அதையே தொடருவேன் என்று தானே தயாரிக்கும் மோசமான உணவைக் கொண்டே நாட்களைக் கடத்துகிறார்.அது ஒரு வகை வீம்பு என்றாலும் தன்னிலையை எவ்வகையிலும் இழக்க மாட்டேன் என்ற குறிப்பு அடங்கி இருக்கிறது. உணவை பற்றிச் சொல்வதில் இருந்தே தன் குணத்தையும் அங்கே குறியீடாக்கி உள்ளார்.
பல வகை மனிதர்கள்,புது சூழல் தாக்கத்தின் தடுமாற்றம் என்றிருந்தாலும் வந்த வேலையை முடித்துக் கொண்டு பற்பல நினைவுச் சாரங்களை நினைவடுக்குகளில் புகுத்திக் கொண்டு தன் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குப் பயணப்படுகிறார்.
பயணக்கட்டுரையோ இல்லை பயணநினைவுகளைப் புனைவாக்கும் போது அப்புது மண்ணின் வர்ணனைகளே பெரும்பாலும் ஆக்கிரமிக்கும் என்றாலும் இதில் மனிதர்களின் வர்ணனைகள் அதிகம் தாங்கி தனித்தொரு அழகியலை பெறுவதே மற்றதில் இருந்து வித்தியாசப்பட்டதோ என்னவோ படிக்கும் போது.
சாகசம் அனைவருக்கும் சாத்தியமல்ல என்பதை நிலைநிறுத்துவதுடன் அது இல்லாமலே வாழ்க்கை சுவாரசியமாகும் என்பதைத் தெளிவுப்படுத்துகிறது.
அமெரிக்காவில் உள்ள அயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் சென்று அங்கு ஏழு மாதங்கள் தங்கி இருந்த நாட்களை புனைவாக்கி இருக்கிறார்.
புதிதாக அமெரிக்காவிற்கு செல்பவர்கள் அநேகமாக எல்லோருமே இப்படியான அனுபவங்களை சந்தித்திருப்பார்கள். இதில் புதிதாக எதுவுமில்லை...அப்படித்தான் தோன்றியது முதல் பக்கம் படித்த பொழுது...அதனால் முதல் பக்கத்தோடே புக் மார்க் நீண்ட நாட்கள் உறைந்திருந்தது...அமி என்கிற பெயராலேயே அந்த புக் மார்க் நீண்ட நாட்களுக்கு பின்பு உயிர்த்தெழுந்தது.
அனுபவங்களை தொகுத்து புனைவாக்கி அதை எப்படி வரிசைப்படுத்தவேண்டும், எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும், அதை எப்படி முடிக்க வேண்டும் என்பதற்கான ஒரு பாடமே நடத்தி இருக்கிறார் ஆசிரியர்.
நாம் வெவ்வேறு உணவு பழக்க முறை, வாழ்க்கை முறை, ஏற்ற தாழ்வுகள், மதிப்பீடுகள், முகங்கள், நிறங்கள் கொண்ட மனிதர்களாக இருந்தாலும், புலம்பும் பொழுதும், அழும் பொழுதும், ஆறுதல் தேடும் பொழுதும், பொறாமையிலும், கோபத்திலும் என உணர்வுகளில் ஒன்றாகவே இருக்கிறோம்.
அவர் தங்கி இருந்த ஏழு மாதங்களும் உணவு ஒரு பெரும் பிரச்சனையாக இருந்திருக்கிறது. போரிட்ஜ் என்று நினைக்கிறேன் அமெரிக்க பொங்கல் என்கிற அடைமொழியில் சாப்பிட்டிருக்கிறார்...தினசரி உணவாக சீரியல், பால், சக்கரை, காபி அதனோடவே ஏழு மாதங்களை கடத்தி இருக்கிறார்.
அயோவா பல்கலைக்கழகத்தில் புதிதாக வந்து சேர்ந்த இத்தாலிய பெண்ணான இலாரியாவிற்கு அவர் மேல் ஈர்ப்பு ஏற்படுகிறது...அவருக்காக ஒரு முறை சமைத்து தருகிறாள்...அது வேற விஷயம்...ஆனால் பெண்கள் எந்நாட்டினவராக இருந்தாலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள்...ஆண்களிடம் அன்பை காட்ட, அவர்களை அணுகும் வழிகளாக சமையலே முதன்மை இடத்தை பெறுகிறது. அவருக்கு அவள் சமையல் ஒத்துக்கொள்ளாமல் போய் விடுகிறது. அவள் சமையலுக்கு மட்டுமில்லை அவர் மேல் இருந்த ஈர்ப்புக்கும் நாசுக்காக முற்றும் போட்டு விடுகிறார்…
ஒன்று பெண்கள் “டகராஜன்”(தியாகராஜன் அமியின் இயற் பெயர்) மேல் ஈர்ப்பு கொள்கிறார்கள் அல்லது பெண்கள் அவரால் ஈர்க்க படுகிறார்கள் என்று ஆண்கள் பொறாமை கொள்கிறார்கள்.
அநேகமாக எல்லா கடைகளிலுமே அமெரிக்காவில் ரிட்டன் பாலிசி உண்டு...அதிக நாட்கள் தேவைப்படாத, குறைந்த விலையில் பொருட்கள் தேர்வுக்கு கே - மார்ட், வால் - மார்ட் ஒரு வரம். ஆனால் அங்கு ரிட்டன் செய்யும் பொருட்களை பரிசோதித்து பார்க்காமல் எடுத்து கொள்வது எந்த அளவுக்கு திருப்பி கொடுப்பவர்களுக்கு வசதியோ அந்த அளவுக்கு அதே பொருளை வாங்கி செல்பவர்களுக்கு கஷ்டம்.
அயோவாவின் பனி பொழிவை சமாளிக்க கே-மார்ட்டில் அவர் வாங்கிய வின்டர் பூட்ஸ் அவர் காலை பதம் பார்த்து விடுகிறது. யாரோ உபயோகித்து பார்த்துவிட்டு திருப்பி கொடுத்திருந்த பூட்ஸை கடை பணியாளர்கள் சோதித்து பார்க்காமல் அப்படியே விற்பனைக்கு அடுக்கிவிட ...அதில் அவர் வசதிக்காக சொருகி இருந்த அட்டையால் தான் இவ்வளவு பிரச்சனைகள் என்று அவருக்கு தெரிய வருவதற்குள் நம் பாத விரல்களே அந்த வலியை உணர்கிற எழுத்து நடை.
போர்ட் காலின்ஸில் இருந்து க்ரீலிக்கு செல்ல பேருந்து நிலையம் வருகிறார். அது கொஞ்சம் உள்ளடங்கிய ஊர்.
சிறு ஊர்களிலும் பெரும்பாலும் கார்கள் உபயோகத்தில் இருப்பதால் அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் அதிக மக்கள் வரத்து இருக்காது. பேருந்து போக்குவரத்து வசதியே அதிகமாக பார்சல் எடுத்து செல்லவே உபயோகப்படும்.
க்ரீலிக்கு சென்று சான்பிரான்ஸ்கோ ட்ரெயின் பிடிப்பதற்காக 6.30 க்கு வந்து காத்திருக்கிறார் ஏழு மணிக்கு பேருந்து என்று போட்டிருக்கிறது ஆனால் அங்கு அதற்கான அடையாளமில்லாமல் அமைதியாக இருப்பதை பார்த்து பதட்டமடைகிறார். ஒரு லாரி வந்து நிற்பதை அவர் பஸ் இல்லையே இது என்று யோசனையோடு பார்க்கும்போதே … “ஐயோ அது தான் போய் கேளுங்க, விட்டுடாதீங்கன்னு” அடுத்த வரியை முந்திக்கொண்டு கூக்குரலிட்டு கொண்டிருந்தது என் மனது...அந்த அளவுக்கு அந்த பேருந்தை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தி இருப்பார்.
நம்மூரில் எச்.எம்.டி , டைட்டன் கைக்கடிகாரம் கட்டியவர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் கைக்கடிகாரத்தின் அளவு மூன்று மடங்கு பெரியது தான். இன்று நிறைய வகைகள் வந்து விட்டாலும் எழுபதுகளில் அது அப்படித்தான் இருந்ததாக கேள்வி. அமி யின் கைக்கடிகாரம் செயலிழந்து விட புது கடிகாரம் வாங்க கே- மார்ட் போகிறார். அதன் அளவை பார்த்து பயந்து பாக்கெட்டில் சொருகி கொள்ள கூடிய பேனாக் கடிகாரம் வாங்கி வருகிறார். வீட்டிற்கு வருமுன்னே அது தொலைந்து விடுகிறது.
பெரும்பாலும் புதிதாக வாங்கிய கோட்டில் கூட உள் பைகளில் முனையில் ஒரு ஓட்டை இருக்கும். லேசாக தையல் விட்டிருக்கும். ஒருவேளை கோட் தயாரிப்பவர்கள் அதை ஒரு சம்பிரதாயமாகவே பின்பற்றுவார்கள் போல...நம்மில் பலருக்கு அனுபவத்தில் எப்பொழுதுமே கோட் வாங்கியதும் சோதித்து பார்ப்பது வாடிக்கையாகிவிட்டிருக்கும்.
பேனாக் கடிகாரம் தொலைந்தது என்று படித்தவுடனேயே தோன்றியது “��ோட்” என்பதால் அது பையின் ஓட்டையின் வழியே லைனிங்கிற்குள் விழுந்து இருக்கும் என்று...ஆனால் அதை எப்படி சொல்ல போகிறார் என்று ஆர்வத்தோட தொடர்ந்தேன்...
கீழே விழுந்தாலும் சரி, தொலைத்துவிட்டு தேடினாலும் சரி யாருடைய தனிப்பட்ட வாழ்விலும் தலையிடாத மக்கள், அதே சமயம் தங்கள் கடமைகளை சரிவர செய்வார்கள்...ஒரு பயணிக்காக வண்டி எடுப்பார்கள், ஒருவருக்காக மட்டுமே கூட தியேட்டரில் படம் ஓட்டுவார்கள்… அவர் ஏறி சென்றது அன்றைய நாளின் பேருந்துக்கு கடைசி ட்ரிப் ஆகிவிட...பனிபொழிவில் கைவிட்டு தேடியும் பேனா கிடைக்காமல் வீட்டை அடைய ஏழு கிலோமீட்டர் குளிரிலும் பனியிலும் நடந்து வீட்டை வந்தடைந்து பின்பு பொறி தட்ட கோட்டை ஆராயும் வரை... நமக்கு ஏற்கனவே விடை தெரிந்தாலும் சுவாரசியம் குறையாமல் வைத்திருக்கார்.
ஒரே கோட்டையே அங்கிருக்கும் வரை போட்டுக்கொண்டிருக்கும் “ஒற்றன்”என்கிற கதை எழுதும் குபேக்னா, ஹாலிவுட்காரர்களை போல சார்ட் போட்டு, முன் திட்டம் அமைத்து “மகா ஒற்றன்”கதை எழுதும் பிராவோ, இவர்களைவிட “ஒற்றன்”என்கிற இந்த புனைவை எழுதி இருக்கும் அசோகமித்திரன் தான் உண்மையான ஒற்றன்.
ஏழுமாதத்தில் இத்தனை அனுபவங்களா என்று மிக ஆச்சரியமாகவே இருக்கிறது. ஒவ்வொன்றைய��ம் அத்தனை நுணுக்கமாக கவனித்திருக்கிறார். உடையோ, உணவோ, மொழியோ, கலாச்சாரமா, குளிரோ, ஒரு தடையாக கருதாததால் தான் அவரால் இத்தனை அனுபவங்களை, அத்தனை மனிதர்களை சேகரிக்க முடிந்திருக்கிறது.
இந்த கதையில் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையின் முக்கியமான முடிச்சுகளை, யோசிக்க கூடிய விஷயங்களை அங்கதமாக தூவிக்கொண்டே வந்திருப்பார்.
“அம்மாவின் பொய்கள்” என்கிற பகுதியில் விக்டோரியா ஒரு நாடகம் நடத்துகிறாள் அதை பார்த்து கொண்டிருக்கும் அமி அதில் நடிக்கும் நடுத்தர வயது பெண் பேசும் வசனத்திற்கு மனதிற்குள் பதில் சொல்லி கொண்டிருப்பார். அந்த பகுதி மிக நகைச்சுவையாக சொல்லி இருப்பார்.
////////////நடுவயதுப் பெண்மணி மட்டும் இருமுறை கண் சிமிட்டினாள், தலையை அசைத்தாள், முகத்ததைச் சிணுங்கினாள். ஐந்தாறு வீடு தள்ளியிருந்த ஜன்னலில் தொற்றிக்கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தால். “பெண்களையே சுற்றிக் கொண்டிருந்தாள் உன் காது அறுந்து விழுந்துவிடும்” என்றாள்.
நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“இப்படித் தப்புத்தண்டா செய்துகொண்டே இருந்தால் கடவுள் கண்ணைக் குத்திடுவான்.” எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“ஓயாமல் தின்னக் கேட்டுக்கொண்டே இருந்தால் வயிற்றுக்கு ஆகாது.” பிறகு தனக்குள் கூறிக்கொள்வது போலச் சொன்னாள்: “இங்கே வீட்டில் தின்ன என்ன இருக்கிறது?”
எனக்கு நிலையே கொள்ளவில்லை. ‘எப்படி’ என்று ரின் சோப் விளம்பரத்தில் மங்கலான சட்டைக்காரர் மின்னலடிக்கும் வெண்மைச் சட்டைக்காரரைப் பார்த்துக் கேட்பது போலத் துடித்தேன்.////////////
இந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்ததும்...நானும் நிமிர்ந்து உட்கார்ந்தேன்… என் அனுபவங்களை அவர் எழுத்தில் பார்த்த போது எனக்குத் தூக்கிவாரிப்போட்டது… அது சுவாரசியமாக எனக்குள் ஊடுருவி செல்லும்போதும், அதையே அங்கதமாக நுணுக்கமாக சொல்லும்போதும் வேறு ஒரு பார்வையை காட்டும்போதும் எனக்கு நிலையே கொள்ளவில்லை… ‘எப்படி’ என்று அமியிடம் நானும் ரின் சோப்பு விளம்பரத்தில் கேட்பது போலத் துடித்தேன்.
பெங்களூர் சென்ற சமயம் அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலை வாங்கியிருந்தேன். பெயரைப் பார்த்ததும் ஏதோ திரில்லர் கதையாக்கும் என்று இரண்டு வருடங்களாக வாசிக்காமலேயே இருந்துவிட்டேன். கிருமிக்காலத்தில் அதிகம் அழுத்தம் தராத புத்தகத்திலிருந்து மீளவும் வாசிப்பைத் தீவிரமாக ஆரம்பிக்கலாம் என்று தூக்கிய புத்தகம் ஒற்றன்.
அனுபவத்தைப் புனைவினூடு வெளிப்படுத்தும் நாவல் ஒற்றன். அமெரிக்காவிலுள்ள ஐயோவா பல்கலைக்கழகத்தின் அழைப்பின்பேரில் சர்வதேச எழுத்தாளர் சந்திப்புக்குச் செல்லும் அசோகமித்திரனுக்கு அங்கு ஏற்படும் அனுபவங்களே இந்நாவல். ஒருவிதத்தில் இது பயணக்கட்டுரை. அல்லது பயணப் புனைவு.
எல்லோருமே இப்போது பயணம் செய்கிறார்கள். தவிர, வீட்டுக்கழிப்பறையிலிருந்தவாறே சென்பீட்டர்ஸ்பேர்கின் கொங்கிரீட் பிளாட்பாரத்தில் நம்மால் இப்போது நடக்கமுடிகிறது. அங்குள்ள கட்டடங்களையும் கடைகளையும் அவதானிக்கமுடிகிறது. அந்தந்த ஊர் மக்களின் வாழ்வை அங்குள்ள இலக்கியவாதிக���ே எழுதிவிடுகிறார்கள். அல்லது நண்பர்களின் முகநூல் டைம்லைன் சொல்லிவிடுகிறது. இந்த நிலையில் வெளியிலிருந்து செல்லும் ஒருவர், ஒரு குறுகிய காலத்தில் ஒரு புது ஊரையும் மனிதரையும் எப்படி இனங்கண்டு எழுதிவிடமுடியும்? பயண நூல்கள் காலவதியாவதற்கு இவையே காரணங்கள் என்று நினைக்கிறேன்.
இது தெரிந்தே ஒற்றனை அசோகமித்திரன் நாவலகாகத் தர முனைந்திருக்கிறார். ஐயோவா நகரத்தை விபரிக்க அவர் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தான் சந்தித்த மனிதர்களை ஓரளவுக்கு வெளிக்காட்ட முனைகிறார். அவர்களுடைய விழுமியங்களில் இருக்கும் நுணுக்கமான வித்தியாசங்களைத் தேடுகிறார். அதனை சொல்லாமல் சொல்லுவதுதான் அசோகமித்திரனின் எழுத்து. என்ன ஒன்று அசோகமித்தரன் ஒருபோதும் வீட்டுக்குள்ளே போவது கிடையாது. யன்னலுக்குள்ளாலும் எட்டிப்பார்ப்பது கிடையாது. அதனால் மிக நெருக்கமாகப் போய் மனிதர்களின் அந்தரங்கத்தை அவர் எழுதுவதில்லை. எட்டநின்றே விளிப்பார்.
ஒற்றனை தனியே நாவலாகவும் பார்க்கமுடியும். சிறுகதைத்தொகுப்பாகவும் பார்க்கமுடியும். பயண அனுபவமாகவும் பார்க்கமுடியும். இப்படியொரு வடிவத்தை எழுபதுகளிலேயே மனுசன் முயன்றிருக்கு. நூல் வெளிவந்த காலத்தில் அது பதிப்பாளர் வீட்டில் கட்டுக்கட்டாகத் தேங்கிக்கிடந்ததாம்.
நூலில் ஓரிரு இடங்களில் கதை சொல்லிக்கு நெருக்கமான உறவுகள் சில கிடைக்கின்றன. பெண் உறவுகளும். அவற்றோடு ஒரு எல்லைக்கு மேலே நெருங்கமுடியாமல் கதையை மாற்றுகின்ற சூழல் அசோகமித்திரனுக்கு ஏற்படுகிறது. இப்படியான தற்புனைவு எழுத்துகளில் இருக்கின்ற சவால் இது. உண்மைக்கு மிக நெருக்கமாகப் புனைவு இருக்கவேணுமெனில் புனைவில் நிறைய உண்மைகள் இருக்கவேண்டும். அப்போது புனைந்து எழுதுவதையும் வாசிப்பவர்கள் உண்மை என்று நம்பிவிடுவர். வாசிப்பு நெருக்கமாகும். இதனுடைய எதிர்விளைவு என்னவெனில் எழுத்தாளரைத் தெரிந்தவர்கள் புனைவை உண்மை என்று நம்பிவிடுவதுதான். அதிலும் சமூக இணையத்தளங்களில் சிறுகதைகளை எழுதும்போது இந்தச் சங்கடம் மேலும் சிக்கலாகிவிடும்.
சில வாரங்களுக்கு முன்னர் ‘ஊபர் ஈட்ஸ்’ என்றொரு சிறுகதை எழுதியிருந்தேன். அடுத்தநாள் மிக நெருக்கமான நண்பன் ஒருத்தன் மெசேஜ் பண்ணியிருந்தான். “என்னடா வேலை போயிற்றா?” என்று. இந்தக்கேள்வியை பொதுவான வாசகர்கள் கேட்பதில்லை. வாசகர்களுக்கு கதைசொல்லிதான் முக்கியம். அதை எழுதிய எழுத்தாளர் எக்கேடு கெட்டால் என்ன? அப்படியொரு வசதி இருக்கும���போது எந்த எல்லைவரை சென்று ஆடலாம். அசோகமித்திரன் தளைகள் ஏதுமின்றி எழுதியிருப்பின் கதைசொல்லிக்கும் அந்த இலாரியாவுக்கும் இடையிலிருந்த அன்பு இன்னமும் நீண்டிருக்கமுடியும்.
சுஜாதாவுக்கும் அசோகமித்திரனுக்குமிடையில் சின்னதான ஒரு கோட்டுத்தொடர்பு உண்டு. சுஜாதாவிடமிருக்கும் வணிகத்தன்மையை நீக்கினால் அதில் அசோகமித்திரன் தெரிவார் என்று தோன்றியது. “ஒற்றன்” நாவலின் “அம்மாவ���ன் பொய்கள்” என்றொரு சிறுகதை உண்டு. அதில் ஞானக்கூத்தனின் கவிதை மிக அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதை வாசிக்கையில் “கணையாழியின் கடைசிப்பக்கங்கள்” நினைவுக்கு வருவதைத் தடுக்கமுடியவில்லை.
இப்போது அந்தக்கவிதை.
பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய்
அசோகமித்திரன் அமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் பிறநாட்டு எழுத்தாளர்களுடன் தங்கியிருந்த அனுபவங்களையும், அங்கே அவருக்கு ஏற்பட்ட பயண அனுபவங்களையும் ஒரு புனைகதையுருவில் "ஒற்றன்" எனும் நாவலாய் கொடுத்திருக்கிறார்.
பயணக் கதைகளிலும், பயணக் கட்டுரைகளிலும் அந்தந்த இடங்களின் நிலப்பரப்பு, உணவு முறை, சுற்றுலா தளங்கள், கலாச்சாரம், பருவநிலை மாற்றம், அங்குள்ள மனிதர்களின் வாழ்வியல் போன்றவையே பிராதானமாக இடம்பெறுவன. ஆனால், அசோகமித்திரன் தான் சந்தித்த மனிதர்களின் உணர்வுகளை பிரதானப்படுத்துகிறார். வெளிநாடு சென்றடைந்தவுடன் வரும் பயம், பதட்டம், பழக்கமில்லாதலால் வரும் தயக்கம் ஆகியவற்றை தனது சொந்த அனுபவங்களின் மூலம் நம்மிடம் கடத்துகிறார்.
பருவநிலை மாற்றம் மற்றும் பழக்கப்படாத வானிலை ஒரு மனிதனின் மனநிலை மீது ஏற்படுத்தும் தாக்கம், எளிதாக தயாரிக்கப்படும் மேலைநாட்டு உணவு வகையே ஒருவனுக்கு காலை உணவாய் என்றென்றைக்கும் மாறிப்போகும் நிலை, வெளிநாட்டு பேரூந்துகளில் பயணச்சீட்டு பெறும் முறைக்கு பழக்கப்பட ஒருவன் படும் சிரமம் போன்றவற்றின் நுட்பமான வர்ணனை அசோகமித்திரனின் எழுத்தில் வெளிபடுகிறது.
சொந்தங்களை பிரிந்து வாடும் கடினமான நாட்கள், தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு புலம்பெயர்ந்தவர்களின் அவல நிலை, உலக போர்களால் சராசரி மனிதர்களுக்கு உருவாகும் நிச்சயமற்ற வாழ்வு மற்றும் கடல் கடந்து வாழும் அவர்கள் சொந்தங்களின் மனநிலை என பிரிவின் வலியை பல இடங்களில் காட்சிப்படுத்துகிறார்.
தன்னுடன் தங்கி இருந்த சக எழுத்தாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களையும், அவர்களின் செயல்களையும், தனிமனித உறவுகளையும் விவரிக்கும் போது moral/immoral எனச் சுட்டிக்காட்டாமல் உள்ளதை உள்ளபடி மட்டும் கூறி வாசகர்களிடம் விட்டுவிடுவது அசோகமித்திரனுக்கே உரிய பாணி.
ஆங்கிலத்தில் நடைபெறும் உரையாடல்கள் தமிழில் குறிப்பிடப்படுவதால் பல இடங்களில் செயற்கையாய் அமைகின்றன. மற்றபடி அசோகமித்திரனின் மற்றுமொரு அழுத்தமான படைப்பு.
'ஒற்றன்' நாவலை வாசிக்க எடுத்தேன். உண்மையில் அசோகமித்திரனுடன் அயோவா சிடியில் உலா வந்தேன் என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்காவிலிருக்கும் அயோவா -ல் உள்ள அயோவா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்திருந்த, உலகின் பல நாடுகளிலிருந்து பல எழுத்தாளர்கள் பங்குபெறும், நிகழ்வுக்கு இந்தியாவிலிருந்து அசோகமித்ரனும் சென்றிருக்கிறார். அங்கு அவர் பெற்ற அனுபவங்களை ஒற்றன் வழியாக நமக்குக் கடத்துகிறார்.
அசோமித்ரனின் மொழி ஆளுமை என்னை வியக்கவைக்கிறது. "ஒரு நகைச்சுவையை, தத்துவத்தை, கதாபாத்திரத்தின் எண்ண ஓட்டங்களை, எப்படி அழகான, எளிமையான மொழியின் வழியும் சொற்றொடரின் அமைப்பின் வழியும் கடத்துகிறார் இந்த மனிதர்" என எண்ணிக்கொண்டேன்.
இந்நிகழ்வு 1974 ல் நடந்துள்ளது. ஆனால் பத்தாண்டுகள் கழித்து நாவல் வெளியாகியுள்ளது. எப்படி ஒரு எழுத்தாளன் தன் நினைவுகளிலுள்ளவற்றை நேரில் கண்டவாறு எழுதுகிறான்.அதை அங்ஙனமே வாசகனுக்கும் கடத்துகிறான். நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது.
அசோகமித்திரனுடன் அயோயா நகரில் உறைபனியில் உலவியது போலவும், சைவ உணவுக்காக அவருடன் திண்டாடியது போலவும், மணிக்கொருமுறை காப்பி குடித்ததைப்போலவும், அபே, கஜுகோ, பிராவோ, யீயு போன்ற எழுத்தாளர்களுடன் உரையாடியது போலவும், அவருடன் தொலைந்த கடிகாரத்தைத் தேடியது போலவும், புது ஜோடுகளை வாங்கியது போலவும்,......என பல அனுபவங்களைத் தந்துவிட்டார்.
இலாரியாவுடனான தருணத்தில் அவர் பேசுகையில் 'உன் அழுகையைப் பார்க்கும் வாய்ப்பை உன் தனிமைக்கு மட்டும் கொடு. யாரின் ஆறுதலும் சொற்கள் மட்டுமே. அவை உன் அழுகையைப் பங்கிடாது' என்பன போன்று வரும் வரிகள் எனக்கு என் கவிதை வரிகளை நினைவுறுத்தின.
"சோகக் கடலின் ஆழத்தில் தத்தளிப்பவனை கடற்பரப்பின் ஆதரவு (ஆறுதல்) அலைகள் கரை கொண்டு சேர்ப்பதில்லை" - கருப்பன்
இப்போதெல்லாம் யோசிக்கும்போதுகூட அசோகமித்திரனின் மொழிநடையைப்போலேதான் என் சொற்களை அடுக்குகிறேன். இந்நாவலை முடிக்கும்போது அசோகமித்திரன் என்னை சிறுகதை எழுவதற்கு தூண்டியிருந்தார்.
மனிதன் செங்குத்தாக நின்று இரு கால்களில் நடக்கக் கற்றுக்கொண்ட நாளிலிருந்தே அவன் பூமியின் ஈர்ப்பு சக்திக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகிறான் - அ.மி
அமெரிக்காவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நாவலாக தந்திருக்கிறார்... அயோவா பல்கலைகழகம் நடத்தும் இலக்கிய மாநாட்டில் கலந்துகொள்ளும், பல்வேறு நாட்டைச்சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களிடம் ஏற்பட்ட அனுபவமே நாவலுக்கான ஆதாரம்... மேலோட்டமாக படித்தால் சிலாகிக்க ஏதுமில்லாமல் போகலாம், ஆனால் அ.மியின் முக்கியமான நாவல்களில் ஒன்று, காரணம் கதை நடக்கும் இடம் அமெரிக்கா. இதுவரை தனக்கு நெருக்கமான சென்னை வீதிகளை���ும் அதன் மனிதர்களையும் அரிதாரம் பூசாமல் அப்படியே தந்ததை போல அமெரிக்க வாழ்கையையும் தந்துள்ளார்.... ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களின் இயல்பை பேசுவதாக உள்ளது... பிரதான கதை என்று ஏதும் இல்லாத போதும் , கதாபாத்திரம் வாயிலாக மொத்த நிகழ்வுகளையும் நம்மால் ஒரு புள்ளியில் நினைவு கொள்ள இயலும்... அ.மி யின் நாவல் வரிசையில் ஒற்றன் மற்றும் இன்று தனித்தன்மையுடையவை...
ஒற்றன் - ஜி.தியாகையராஜன் என்கிற அசோகமித்திரன் தமிழ் படைஉலகில் தனக்கு என்று ஒரு முத்திரையை வைத்து இருக்கிறார்.
அவரின் 1974ம் ஆண்டு அயோவா பல்கலைகழகம் தாங்கிய அழைப்பிதழில் பேரில் அமெரிக்கா பயணம் மற்றும் சிறிது கால அமெரிக்கா அனுபம் தான் ஒற்றன்
முதல் அமெரிக்கா பயணம், பொதுவாக அனைவருக்கும் ஒரு வித மகிழிச்சி, வித்தியாசமான நிகழ்வுகளால் பின்னப்பட்ட அனுபவம் கலவை தான். எனக்கு அப்படியேய
அமெரிக்காவின் பனி, பேருந்து பயணம், காப்பி, கால மாறுதலுக்கு ஏற்ப ஆடைகள் , மக்கள் , வாழும் முறை எல்லாம் இந்தியர்களுக்கு ஒரு முரண். அசோக் மித்திரன் தனது சிறிது கால பயணத்தில பல இடக்களுக்கு போய் இருக்கிறார், இணையம் இல்லா அமெரிக்காவில் சல்லடை போட்டு அலசி இருக்கிறார். பல அனுபவங்கள் அதில் சில என்னைக்கும் நேர்தவை
எப்போவும் காப்பி குடிக்கிறார் , பெண்களுக்கு பிடித்த ஒரு மனிதராக , ஆண்களும் போற்றும் ஒரு நண்பனாக வலம் வருகிறார். முடியவில் அசோகமிடற்றான் ஏன் அமெரிக்காவை விட்டு செல்லுகிறார் என்ற ஏக்கம் என்னக்கு வந்தது
இது ஒரு பயணக்கட்டுரை போன்ற நாவல் ஆகும். ஒரு புதிய இடத்திற்கு சென்று விட்டு அதன் நடைமுறைகள் தெரியாமல் ஒருவர் தயங்குவதும் தள்ளாடுவதும் மிகவும் நுணுக்கமாக பதிவு செய்யப்பட்டிருப்பது என்னை மிகவும் கவர்ந்தது.
மனிதர்களை எப்படி சம்பாதித்து இருக்கிறார் என்றும் மனித உறவுகள் எவ்வளவு தேவையானவை என்றும் இந்த நாவல் வலியுறுத்துகிறது.
முன்பின் தெரியாத பிற நாட்டவர் உடன் ஒரு வெளிநாட்டில் ஆறு மாதங்கள் இருக்க வேண்டும் எனும் சூழலே என்னை வியக்க செய்கிறது. அப்படி இருக்கையில் பல்வேறு குணத்தவருடன் இருந்து எப்படி உறவுகளை சம்பாதித்திருக்கிறார் என்று கூறுகிறது இந்த நூல்.
There is a popular saying, "Don't judge a book with its cover". I would say don't judge a book with its title too. "Ottran"by seeing this title if you think this is going to be a nail biting spy kind of story, then you will be undone. This is a very light book about the author's trip to America and his time over there. He has beautifully portrayed every character he had met over there. By reading the book, you will get to more about the author than the character in it.
அசோகமித்திரன் எழுதிய புத்தகங்களில் எனது முதல் வாசிப்பு.
அயோவா நகரத்துக்கு செல்லும் ஒரு கவிஞனின் பயணத்தொகுப்பு அல்லது பயணக்கட்டுரை .
பொதுவாக பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் சாமானியனுக்கு புரியாது என்ற எண்ணம் உண்டு. எனக்கும் இருந்ததுண்டு. ஒற்றன் அப்படி ஒன்றும் புரியாமல் இல்லை. வெகு இயல்பான நடையில் ஒரு சராசரி மனிதனின் பதிவாகவே இருக்கின்றது. எனினும் ஆங்காங்கே வரும் வெளிநாட்டு பெயர்களை நினைவு வைத்து கொள்வது சற்றே சிரமமாக உள்ளது.
The book is all about Asokamithran's America Trip and IOWA experience. This book is usually with the author's own humour style. Good to Start this year with his books.
This is a fictionalized version of Asokamiththiran’s experiences in USA when he was invited for a six-month program in Iowa City University along with writers from across the world. Asokamiththiran’s charming self-deprecation is in full employ as he describes his interactions with other writers and authors. So many interesting and fascinating characters are effectively brought to life through his writing. This was such a lovely book
A Tamil writer lands up in a University in Iowa as a part of a 7 month resident programme for a bunch of writers from around the world. Mole details out some encounters of the writer and his encounters with Brazilians, Peruvians, American consumerism etc. Except for a few passages, the book failed to impress. Some sparks must have got lost in translation! Who knows?
Very well written collection of memoirs by the author during his US visit in 1974. His observations are very interesting and funny at times,making it an easy read. Highly recommended to all readers looking for a nice travel companion.
இந்த பத்தகம் தமிழின் மூத்த எழுத்தாளரான அசோகமித்ரன் அவர்கள் Oct 1973 முதல் 74 Apr வரை அமெரிக்காவின் ஐவோவ பல்கலைகழகத்தில் "Writer In Residence" ஆக தங்கிய அனுபவ குறிப்புகள்.