உள்ளடக்கத்துக்குச் செல்

வைஷ்ணவ தேவி கோயில்

ஆள்கூறுகள்: 33°01′48″N 74°56′54″E / 33.0299°N 74.9482°E / 33.0299; 74.9482
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வைஷ்ணவ தேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வைஷ்ணோ தேவி
கத்ராவில் அமைந்துள்ள, கோடிக்கணக்கானவர்களால் வழிபடப்படும் வைஷ்ணோ தேவி அம்மன்
வைஷ்ணவ தேவி கோயில் is located in ஜம்மு காஷ்மீர்
வைஷ்ணவ தேவி கோயில்
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலின் இருப்பிடம்
வைஷ்ணவ தேவி கோயில் is located in இந்தியா
வைஷ்ணவ தேவி கோயில்
வைஷ்ணவ தேவி கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
அமைவு:கத்ரா
அமைவு:ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஏற்றம்:1,584.96 m (5,200 அடி)
ஆள்கூறுகள்:33°01′48″N 74°56′54″E / 33.0299°N 74.9482°E / 33.0299; 74.9482
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:குகைக்கோவில்
இணையதளம்:maavaishnodevi.org

மாதா வைஷ்ணோ தேவி கோவில் (Vaishno Devi Temple), அல்லது வைஷ்ணவ தேவி கோவில், என்பது இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வைஷ்ணோ தேவி மலையில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமான இக்கோவிலில் பிரதான தெய்வம் மாதா ராணி, வைஷ்ணவி போன்ற பெயர்களால் வழிபடப்படுகிறார்.

கோவில்

[தொகு]

வட இந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோவில் 5200 அடிகள் உயரத்திலும், கத்ரா என்ற ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் (7.45 மைல்கள்) தொலைவிலும் அமைந்துள்ளது.[1] ஆண்டுதோறும் சுமார் 8,00,000 பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வந்து தமது காணிக்கைகளைச் செலுத்துகின்றனர்.[2] திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இக்கோவிலை ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் குழு பராமரித்து வருகிறது. உதம்பூர் என்ற இடத்தில் இருந்து கத்ரா வரை புனித யாத்திரை மேற்கொள்வதற்காக இரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.[3] அருகிலுள்ள விமான நிலையம் ஜம்மு வானூர்தி நிலையம் ஆகும். இங்கு அதிகமான விமான போக்குவரத்து உள்ளது. அனைத்து உள்ளூர் விமான சேவை வழங்கும் நிறுவனங்களும் ஜம்மு வானூர்தி நிலையத்திற்கு சேவைகள் வழங்கி வருகின்றன.

புராண வரலாறு

[தொகு]

திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது, முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணோ தேவியை உருவாக்கினர். ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோ. இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள். அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணோ தேவி பிறந்தார். குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணோ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார். விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா இராமன் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது.

திரிகுடா இராமனிடம் தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். இராமன் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார். இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார். அதேசமயத்தில் இராமன் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் நவராத்திரியின் பொழுது இராமன் இராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர். இராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட இராமன் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் தான் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார். மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணோ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணோ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார். [4]

பைரவ் நாத் கதை

[தொகு]

காலம் செல்லச்செல்ல, அன்னை தெய்வத்தைப் பற்றிய மேலும் கதைகள் வெளிவந்தன. அது போன்ற ஒரு கதையே ஸ்ரீதரருடையது.

அன்னை வைஷ்ணோ தேவியின் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட ஒரு பக்தர் ஸ்ரீ-தராவார். அவர் தற்போதைய கத்ராவில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஹன்சாலி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தார். ஒரு முறை அன்னை அவர்கள் அவர் முன்னால், ஒரு மிகவும் அழகான மனதை கொள்ளை கொள்ளும் இளம் பெண்ணின் உருவத்தில் காட்சி தந்தார். அந்த இளம்பெண் அடக்கமான பண்டிதரை ஒரு 'பண்டாரா' என்ற விருந்தைப் படைக்குமாறு கேட்டுக்கொண்டார். (ஆண்டிகள் மற்றும் பக்தகணங்களுக்கு உணவளிக்கும் விருந்து)

பண்டிதரும் கிராமத்திலும் அருகிலுள்ள இடங்களிலும் வசிக்கும் மக்களை விருந்துக்கு அழைக்கப் புறப்பட்டார். அவர் 'பைரவ் நாத்' என்ற பெயர் கொண்ட சுயநலம் வாய்ந்த அரக்கனையும் விருந்திற்கு அழைத்தார். பைரவ் நாத் ஸ்ரீ-தரிடம் அவர் எவ்வாறு அவருடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளாய் என்று கேட்டார். தவறுகள் நிகழ்ந்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். இதனால் கவலையுற்று பண்டிதர் அமர்ந்திருக்க, தெய்வீக அம்சம் பொருந்திய அந்தப்பெண் மீண்டும் அவர் முன் தோன்றி, அனைத்து ஏற்பாடுகளும் நடந்தேறும், அதனால் அவர் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினாள். அக்குடிசையில் 360 க்கும் மேற்பட்ட பக்தர்களை அமர வைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவர் வாக்களித்த படியே பண்டாரா என்ற அந்த விருந்து மிகவும் இனிதாக நடந்து முடிந்தது.

பைரவ் நாத் அந்த தெய்வீகப்பெண்ணிடம் இயற்கைக்கு மாறான சக்திகள் இருப்பதை ஒப்புக்கொண்டார் மேலும் அவரை மேற்கொண்டும் சோதிக்க முடிவுசெய்தார். அவர் அந்த தெய்வீகப்பெண்ணை திரிகூட மலைகளில் தேடி அலைந்தார். 9 மாதங்களுக்கு பைரவ் நாத் அந்த மலைகளில் அந்த மாயம் நிறைந்த பெண்ணைத் தேடி அலைந்தார், அவர் அந்தப்பெண்ணை அன்னை தெய்வத்தின் அவதாரம் என்றே நம்பினார். பைரவிடமிருந்து ஓடிப்போகும் பொழுது, தேவி அவர்கள் ஒரு அம்பை பூமியில் செலுத்த, அவ்விடத்தில் இருந்து நீரூற்று பெருகியது. அவ்வாறு விளைந்த ஆற்றின் பெயரே பாணகங்கை ஆகும். பாணகங்கை ஆற்றில் குளிப்பதால் (பாணம்: அம்பு), அவர்கள் இழைத்த அனைத்து பாவங்களையும் கழுவி போக்குவதோடு, அன்னை தெய்வத்தின் அருளையும் பெறலாம் என அன்னை தெய்வத்தின் மேல் பற்று கொண்டவர்கள் நம்புகின்றனர். இந்த ஆற்றின் கரைகளில் தேவியின் காலடிச்சுவட்டுகள் பதிந்துள்ளது மேலும் இன்றும் அச்சுவடுகள் அதே போல் விளங்குவதை நாம் காணலாம், அதனால் சரண் பாதுகா என்று பக்தியுடன் இந்த ஆற்றின் கரைகள் மக்களால் இன்றும் போற்றப்படுகின்றன. அதற்குப்பிறகு வைஷ்ணொ தேவி அத்கவரி என்ற இடத்தின் அருகில் உள்ள கர்ப் ஜூன் எனப்படும் பாதுகாப்பு நிறைந்த குகையில் தஞ்சம் அடைந்து, 9 மாதங்களுக்கும் மேலாக கடுந்தவம் புரிந்தார் மேலும் அதன் மூலமாக ஆன்மீக அறிவு மற்றும் ஆற்றல்களைப் பெற்றார். பைரவர் அவரை கண்டுபிடித்த பொழுது அவருடைய தவம் கலைந்தது.

பைரவர் அவரை கொலை செய்ய முயற்சித்தபொழுது, வைஷ்ணொ தேவிக்கு மகா காளியின் உருவத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்னை இறைவியின் இந்த உருமாற்றம் தர்பார் என்ற இடத்திலுள்ள புனிதமான குகையின் வாயில் அருகே நிகழ்ந்தது. அதற்குப்பின் அன்னை தெய்வம் மிகவும் ஆக்ரோஷத்துடன் பைரவரின் தலையைத் துண்டித்தார், அதன் விளைவாக துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப்பெறும் புனித குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது.

இறக்கும் தருவாயில், பைரவர் தன்னை மன்னிக்கும் படி அன்னையிடம் வேண்டிக்கொண்டார். பைரவர் முக்தி அடைவதற்காகவே அவரைத் தாக்கினார் என்பதை அன்னை தெய்வம் அறிந்திருந்தார். அவர் பைரவருக்கு மறுபிறவி என்ற காலச்சக்கரத்தில் இருந்து முக்தி அளித்தார். மேலும், ஒவ்வொரு பக்தனும், அன்னை தெய்வத்தின் தரிசனம் பெற்றபின்னர் புனித குகையின் அருகிலிருக்கும் பைரவ நாதரின் கோவிலுக்கும் தவறாமல் சென்றால் மட்டுமே பக்தர்கள் அவர்களுடைய புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் பைரவனுக்கு அளித்து அருள் பாலித்தார். அதேநேரத்தில் வைஷ்ணொதேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டார் மேலும் என்றென்றைக்கும் மீளாத தவத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையில், பண்டிதர் ஸ்ரீ-தர் பொறுமை இழந்தார். அவர் கனவில் கண்ட அதே வழியை பின்பற்றி திரிகூட மலையை நோக்கி நடந்து இறுதியில் குகையின் வாயிலை அடைந்தார். அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் 'திரிசூலத்தை' வழிபட்டார். அவருடைய வழிபாட்டைக்கண்டு இறைவியின் உள்ளம் குளிர்ந்தது. அன்னை அவர் முன் தோன்றி அவரை வாழ்த்தினார். அந்த நாள் முதல், ஸ்ரீ-தர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அன்னை வைஷ்ணொ தேவியை வணங்கி வருகின்றனர்.[5]

அமைவிடம்

[தொகு]

வைஷ்ணோ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கத்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது.இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது.

கோவிலில் நடைபெறும் முக்கிய பண்டிகைகள்

[தொகு]

பக்தர்களுக்கான சேவைகள்

[தொகு]

பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவை மலையில் நடந்து பயணிக்கும் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு ஒன்றை கிலோ மீட்டர் தொலைவிற்கு இலவச கழிப்பிடங்களும், ஓய்வு எடுக்க மண்டபங்களும், தாகம், பசி நீக்கிக் கொள்ள தேனீர் கடைகளும், சிற்றுண்டிச்சாலைகளும் உள்ளது. மலைக்கோயில் பாதையில் இரவுநேரப் பயணித்தின் போது உறங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் மூன்று இடங்களில் வசதி செய்துள்ளனர் கோயில் நிர்வாகம். மேலும் உயரமான மலை என்பதால் பிராணவாயு குறைவாக இருக்கும். எனவே நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும், அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், கோயில் நிர்வாகம் ஆங்காங்கே மருத்துவர்களும், மருத்துவ வசதிகளுடன் கூடிய முதலுதவி மையங்கள் அமைத்துள்ளனர். மலையில் நடக்கவும், குதிரைகள் மீது ஏறி பயணிக்க முடியாத பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகம் வைஷ்ணோ தேவி மலைகோயிலுக்கு செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்துள்ளது.

கோவில் பாதுகாப்பு நடவடிக்கைகள்

[தொகு]

இக்கோயிலுக்கு செல்வதற்கு முன் கத்ரா நகரத்தில் உள்ள கோவில் தேவஸ்தான அலுவலகங்களில் முன் அனுமதி சீட்டு பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு இல்லாமல் கோவிலின் நுழைவு வாயிலை யாரும் கடந்து செல்ல முடியாது. கோவில் பாதையில் புகையிலையிலான பொருட்கள், தீப்பெட்டி, கத்தி, எளிதில் எரியும் வேதியியல் பொருட்கள் கொண்டு செல்வதை கோவில் நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும் இக்கோயிலுக்கு பாக்கித்தானிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் மலைக்கோயில் முழுவதும் 24 மணிநேரமும் கோவில் பாதுகாப்பு படையினர், மாநில, மத்திய அரசுகளின் காவல் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மலைக்கோவிலுக்கு பக்தர்கள் செல்லும் பாதை முழுவதும் இருபுறங்களிலும் இரும்புவேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பு உணர்வுடன் வைஷ்ணோ தேவி மலைக்கோயிலுக்கு பயணிக்கலாம்.

கோவில் நிர்வாகம்

[தொகு]
குளிர்காலத்தில் தேவியின் கோயில்

சம்மு காசுமீர் மாநில ஆளுனரின் தலைமையில் அமைந்துள்ள வைஷ்ணோ தேவி கோவில் நிர்வாகக் குழு இக்கோயிலின் நிர்வாகத்தை கண்காணிக்கிறது.

பார்க்க வேண்டிய மற்ற இடங்கள்

[தொகு]

காலபைரவர் கோவில் (பைரவ்நாத்) (வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மேல் உள்ளது)

தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்

[தொகு]
  • மாதா வைஷ்ணோ தேவி - 1971ம் ஆண்டு வெளியான திரைப்படம்
  • ஜெய் மா வைஷ்ணோ தேவி - இத்தொடர் வைஷ்ணவி தேவியின் கதையை பற்றி விவரித்த முதல் தொடராகும்
  • ஜகஜ்ஜனனி மா வைஷ்ணோ தேவி - ஸ்டார் பாரத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடர் அம்மனின் சிறு பிராயம் முதலான கதையினை விவரிக்கிறது

படத்தொகுப்பு

[தொகு]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. வலைத்தளம்: http://maavaishnodevi.org
  2. வலைத்தளம்: http://www.samaylive.com/news/60000-pilgrims-visit-vaishno-devi-shrine-during-navratras/615962.html
  3. 10 key facts about Udhampur-Katra rail link - Times of India
  4. "மாதா வைஷ்ணவ தேவி ஜி". Archived from the original on 2009-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.
  5. "பண்டிட் ஸ்ரீதர்". Archived from the original on 2009-10-02. பார்க்கப்பட்ட நாள் 2010-03-03.

வெளி இணைப்புகள்

[தொகு]

Bibliography

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைஷ்ணவ_தேவி_கோயில்&oldid=4082719" இலிருந்து மீள்விக்கப்பட்டது