டன்லின் உள்ளான்
டன்லின் உள்ளான் | |
---|---|
இனப்பெருக்க கால இறகுகளுடன் டன்லின் உள்ளான், நி.ஜெ. | |
Display song recorded in Cardiganshire, Wales | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுகோலோபாசிடே
|
பேரினம்: | |
இனம்: | C. alpina
|
இருசொற் பெயரீடு | |
Calidris alpina (லின்னேயஸ், 1758) | |
Range of C. alpina Breeding Resident Non-breeding Passage Vagrant (seasonality uncertain) | |
வேறு பெயர்கள் | |
|
டன்லின் உள்ளான் ( Calidris alpina ) என்பது ஒரு சிறிய பறவை இனம் ஆகும். இது முதலில் 1531-1532 இல் பதிவு செய்யப்பட்டது. இதன் ஆங்கிலப் பெயரான டன்லின் என்பதில் உள்ள டன், என்பதற்கு "மந்தமான பழுப்பு" என்று பொருளாகும், -லிங் என்ற பின்னொட்டுக்கு நபர் அல்லது பொருள் என்பது பொருளாகும்.[2]
இது ஆர்க்டிக் அல்லது துணை ஆர்க்டிக்கைச் சுற்றிய பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. வட ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் குளிர்காலத்தில் தென் ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்குக்கு என நீண்ட தொலைவுக்கு வலசை போககின்றன. அலாஸ்கா மற்றும் கனேடிய ஆர்க்டிக்கில் இனப்பெருக்கம் செய்யும் பறவைகள் வட அமெரிக்காவின் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடற்கரைகளுக்கு குறுகிய தொலைவுக்கு வலசை போகின்றன. இருப்பினும் வடக்கு அலாஸ்காவில் கூடு கட்டும் பறவைகள் ஆசியாவில் குளிர்காலத்தில் தங்கி இருக்கும். ஐபீரிய தெற்கு கடற்கரையில் பல டன்லின் உள்ளான்கள் குளிர்காலத்தை கழிக்கும்.
வகைபிரித்தல்
[தொகு]டன்லின் உள்ளான் 1758 இல் சுவீடிய இயற்கையியலாளர் கார்ல் லின்னேயசால் அவரது சிஸ்டமா நேச்சுரேயின் பத்தாவது பதிப்பில் டிரிங்கா அல்பினா என்ற இருசொல் பெயரில் விவரிக்கப்பட்டது. இந்த இனம் முன்பு எரோலியா,[3] பேரினத்தில் வைக்கப்பட்டது. ஆனால் இப்போது 23 இதர உள்ளான்களுடன் காலிட்ரிஸ் பேரினத்தில் சேர்க்கப்பட்டது, இது 1804 ஆம் ஆண்டில் ஜெர்மன் இயற்கையியலாளர் பிளாசியஸ் மெர்ரெம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[4][5]
இதில் பத்து துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[5]
- C. a. arctica (Schiøler, 1922) - வடகிழக்கு கிறீன்லாந்தில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. schinzii ( பிரெம் & ஷில்லிங், 1822) - தென்கிழக்கு கிரீன்லாந்து, ஐசுலாந்து, பிரித்தானியத் தீவுகள், எசுக்காண்டினாவியா மற்றும் பால்டிக் நாடுகளில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. alpina ( லின்னேயஸ், 1758) - வடக்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. centralis ( புடர்லின், 1932) - வட-மத்திய மற்றும் வடகிழக்கு சைபீரியாவில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. sakhalina ( Veillot, 1816) - கிழக்கு உருசியாவிலிருந்து சுகோத்கா மூவலந்தீவு வரை இனப்பெருக்கம் செபவை
- C. a. kistchinski Tomkovich, 1986 — ஓக்கோத்துக் கடலைச் சுற்றி கூரில் தீவுகள் மற்றும் கம்சாத்கா வரை இனப்பெருக்கம் செய்பவை
- C. a. actites நெச்சேவ் & டோம்கோவிச், 1988 - சகாலினில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. arcticola ( டாட், 1953) - வடமேற்கு அலாசுகாவிலிருந்து வடமேற்கு கனடா வரை இனப்பெருக்கம் செய்பவை
- C. a. pacifica ( கூஸ், 1861) - மேற்கு மற்றும் தெற்கு அலாசுகாவில் இனப்பெருக்கம் செய்பவை
- C. a. hudsonia ( டாட், 1953) - நடு கனடாவில் இனப்பெருக்கம் செய்பவை
விளக்கம்
[தொகு]அளவீடுகள் :[6]
- நீளம் : 16–22 cm (6.3–8.7 அங்)
- எடை : 48–77 g (1.7–2.7 oz)
- இறக்கைகள் : 36–38 cm (14.2–15.0 அங்)
இனப்பெருக்க காலத்தில் வயது முதிர்ந்த டான்லின் உள்ளான்களுக்கு வேறு எந்த உள்ளான்களுக்கும் இல்லாதவாறு தனித்துவமான கறுப்பு நிற வயிறு இருக்கும். குளிர்காலத்தில் டன்லின் உள்ளான்களின் மேற்பகுதி சாம்பல் பழுப்பாகக் கருப்புக் கறைகளுடனும், உடலின் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும். மார்பில் சாம்பல் நிற நெடுகுக் கோடுகள் வளையமாக அமைந்திருக்கக் காணலாம். பறக்கும்போது இறக்கைகளில் வெள்ளைப் பட்டை புலனாகும். வால்போர்வை இறகுகள் ஒரு சில கறுப்பாக இருக்கக் காணலாம். கால்கள் மற்றும் சற்று வளைந்த இதன் அலகு கருப்பு. இளம் வயது பறவைகளின் மேலே பழுப்பு நிறத்தில் பின்புறத்தில் இரண்டு வெண்மையான "V" வடிவங்கள் காணப்படும். பல துணையினங்கள் முக்கியமாக இனப்பெருக்க காலத்தில் காணப்படும் இறகுகளில் செம்பழுப்பு நிறத்தின் அளவு மற்றும் அலகின் நீளம் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. அலகின் நீளம் பாலினங்களுக்கு இடையில் மாறுபடும், ஆண் பறவைகளை விட பெண் பறவைகளுக்கு நீண்ட அலகு இருக்கும். டன்லினின் அலகின் நுனியில் ஒரு மென்மையான உறை உள்ளது, அது இரத்த ஓட்டம் மற்றும் பல நரம்பு நுனிகளைக் கொண்டது. இது ஒரு உணர்திறன் பண்பைத் தருகிறது. இது மண் மற்றும் மணலில் முதுகெலும்பில்லி இரையைக் கண்டறியப் பயன்படுகிறது. இறந்த மாதிரிகளில் அலகு கூர்மையாகத் தோன்றினாலும், உயிரோடு இருக்கும்போது அது மழுங்கலாக இருக்கும்.[7]
ட்டீவீ இ..ஈப்..வ்வீ இ.. வ்வீ இ.. ட்ட என பறக்கத்தொடங்குகுகையில் கத்தும்.
நடத்தை
[தொகு]டன்லின் உள்ளான்கள் குளிர்காலத்தில் சிறு கூட்டமாக மற்ற உள்ளான்களோடும், உப்புக் கொத்திகளோடும் திரியக் காணலாம். மணலில் அலகை நுழைத்து இரை தேடும். மனிதர் நெருங்கினால் கூட்டமாக எழுந்து பறக்கும். அலை ஏற்றத்தின்போது கூட்டமாக மணல் மேடுகளில் அலை இறக்கத்தை எதிர் பார்த்து அமர்ந்திருக்கக் காணலாம்.
இந்த பறவை 17–21 cm (6.7–8.3 அங்) நீளமும், 32–36 cm (13–14 அங்) இறக்கை நீட்டமும் கொண்டது. இது சாதாரண இசுடார்லிங்கின் அளவை ஒத்தது. ஆனால் தடிமனான அலகைக் கொண்டது.
டன்லின் உணவில் பூச்சிகள் ஒரு முக்கிய பகுதியாகும்; இது கடற்கரைப் பகுதிகளில் உள்ள மெல்லுடலிகள், புழுக்கள் மற்றும் ஓடுடைய கணுக்காலிளை உண்கிறது.
இனப்பெருக்கம்
[தொகு]இவற்றின் கூடு என்பது தாவரங்களுக்கு அடியில் தரைப்பகுதியில் ஆழமில்லாத குழியில் அமைக்கபபடுவது ஆகும். அதில் பொதுவாக நான்கு முட்டைகள் இடப்படும். முட்டைகள் ஆண் மற்றும் பெண் என பெற்றோர் இருவராலும் அடைகாக்கப்படும் . குஞ்சுகள் தோராயமாக மூன்று வார வயதில் பறக்கத் துவங்கும். பெண் பறவை விரைவில் இனப்பெருக்க இடத்தை விட்டு வெளியேறுவதால், அடைகாத்தல், குஞ்சுகளை பராமரித்தல் போன்றவை ஆண் பறவைகளாளேயே மேற்கொள்ளப்படுகிறது.
நிலை
[தொகு]டன்லின் உள்ளான்கள் மிகப் பெரிய வாழிட எல்லையைக் கொண்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தோன்றினாலும், எண்ணிக்கை வேண்டிய அளவு இன்னும் உள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) இந்த இனத்தை " தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் " என்று குறிப்பிட்டுள்ளது.[1] ஆப்பிரிக்க-ஐரோசிய புலம்பெயர் நீர்ப்பறவைகளின் பாதுகாப்பு ஒப்பந்தம் ( AEWA ) பொருந்தும் இனங்களில் டன்லின் உள்ளானும் ஒன்றாகும்.[8]
காட்சியகம்
[தொகு]-
இரை தேடுதல்
-
யஸ்டாட், ஸ்வீடன்
-
ஸ்பீகெரூக், வடக்கு ஜெர்மனியில் இனப்பெருக்க கால இறகுகள் கொண்ட முதிர்ந்த பறவைகள்
-
குளிர்கால இறகுஉளோடு முதிர்ந்த பறவைகள், வேல்ஸ்
-
இனப்பெருக்க கால இறகுகளுடன் முதிர்ந்த பறவை, லாட்வியா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2019). "Calidris alpina". IUCN Red List of Threatened Species 2019: e.T22693427A155480296. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22693427A155480296.en. https://www.iucnredlist.org/species/22693427/155480296. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Dunlin". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ Committee on Classification and Nomenclature (1973). "Thirty-Second Supplement to the American Ornithologists' Union Check-List of North American Birds". Auk 90 (2): 411–419 [415]. https://sora.unm.edu/node/22371.
- ↑ Blasius Merrem (8 June 1804). "Naturgeschichte" (in German). Allgemeine Literatur-Zeitung 168: Col. 542. https://digipress.digitale-sammlungen.de/view/bsb10502034_00451_u001/1.
- ↑ 5.0 5.1 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Sandpipers, snipes, coursers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 19 November 2021.
- ↑ "Dunlin Identification, All About Birds, Cornell Lab of Ornithology". www.allaboutbirds.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-27.
- ↑ Kaiser, Gary W. (2007). The Inner Bird: Anatomy and Evolution. UBC Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7748-1344-0.
- ↑ "Species". Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA). பார்க்கப்பட்ட நாள் 14 November 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- டன்லின் உள்ளான் videos, photos, and sounds at the Internet Bird Collection
- Dunlin Species Account - Cornell Lab of Ornithology
- Dunlin - Calidris alpina - USGS Patuxent Bird Identification InfoCenter
- Ageing and sexing (PDF; 1.6 MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze
- டன்லின் உள்ளான் photo gallery at VIREO (Drexel University)
- Interactive range map of Calidris alpina at IUCN Red List maps