கண்டோபா
கண்டோபா | |
---|---|
சமசுகிருதம் | மார்த்தாண்ட பைரவர் |
வகை | சிவன் |
இடம் | ஜேஜுரி |
ஆயுதம் | சூலம், வாள் |
துணை | மாலசை, பானு |
கண்டோபா என்றும் மார்த்தாண்ட பைரவர் என்றும் மல்லாரி (Khandoba, Martanda Bhairava, Malhari), என்றும் அழைக்கப்படுபவர் தக்காணப் பகுதியில் சிவ வழி வழிபடப்படும் ஒரு நாட்டார் தெய்வம் ஆவார். மகாராட்டிரா மற்றும் கருநாடகா தெலங்கானா பகுதிகளில் இவர் பல சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிறார்.[1] இச்சமூகங்களில் போர், அந்தணர், வேளாண், வேடுவர், ஆதிதிராவிடர், முசுலீம்கள் உட்பட பலதரப்பட்ட இனக்குழுமங்கள் அடங்கும். கண்டோபா வழிபாட்டில் இந்து மற்றும் சைன மரபுகளின் கலப்பைக் காணமுடிகின்றது. கண்டோபா வழிபாடானது, பொ.பி 9 மற்றும் 10 நூற்றாண்டுகளுக்கு இடையே சிவன், முருகன், சூரியன் முதலான பல்வேறு தெய்வங்களின் கலப்பால் உருவாகி இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. குதிரையில் அல்லது எருதில் இருக்கின்ற போர்வீரராகவோ, அல்லது இலிங்கத்தின் வடிவிலோ கண்டோபா சித்தரிக்கப்படுகிறார். மல்லாரி மான்மியத்தில் புகழப்படும் கண்டோபா தெய்வத்தின் முதன்மையான வழிபாட்டு மைய நிலமாக மராட்டியத்தின் ஜேஜுரி எனும் ஊர் காணப்படுகின்றது.
சொற்பிறப்பியல்
[தொகு]கண்டோபாவின் ஆயுதமான வாளின் இன்னொரு பெயரான "கட்கம்", தந்தையை வடநாட்டில் அழைக்கும் "பா" ஆகிய சொற்கள் இணைந்து கண்டோபா எனும் பெயர் உருவானது. கண்டேராயர், கண்டேராவ் ஆகிய பெயர்கள் கண்டோபா மன்னர் எனும் பொருளைக் கொண்டவை. சங்கதத்தில் கண்டோபாவைக் குறிக்கப் பயன்படுத்தும் மார்த்தாண்ட வைரவர் எனும் பெயரானது மார்த்தாண்ட சூரியன், வைரவர் ஆகிய இரு தெய்வங்களின் பெயர்கள் இணைந்து உருவான பெயர். மல்லரி எனும் பெயர், மல்லனை அழித்தவர் எனும் பொருளைக் கொண்டது.[2] தெலங்கானாவின் நாட்டார் தெய்வமான மல்லண்ணாவுடனும், ஆந்திரத்தின் மல்லிகார்ச்சுனருடனும் சிலநேரங்களில் கண்டோபாவை இணைத்து நோக்குவதுண்டு. செயூரிகவாணி, மகாலசாகாந்தன் (மகாலசையின் கணவன்) ஆகிய பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார்.[3]
உருவவியல்
[தொகு]கண்டோபாவின் வழக்கமான ஓவியமொன்றில், அவரது வெண்குதிரையின் முன்புறம், அவர் மனைவி மாலசை அமர்ந்து ஒரு அசுரனின் மார்பை வேலால் துளைப்பதாகச் சித்தரிக்கப்படுகிறார்.[4] அப்போது ஒரு நாய் அந்த அசுரனின் தொடையைக் கடிக்க, குதிரை அவன் தலையைத் தாக்குகிறது. இன்னொரு அசுரன், குதிரையை தன் கதையால் தாக்க முயலும் போது, கண்டோபா வாளுடன் அவன் மீது பாய முயல்கிறார். இன்னும் சில சித்தரிப்புகளில் கண்டோபா குதிரை மீது வீற்றிருக்க, அக்குதிரை அசுரர்களின் தலைகளை குளம்புகளால் மிதிப்பது போல் காட்சியளிக்கும். [5]
திருவுருவச் சிலைகளைப் பொறுத்தவரை, உடுக்கை, திரிசூலம், வாள், பண்டாரப் பாத்திரம் (மஞ்சட்தூள் நிரம்பிய பாத்திரம்) தாங்கியவராக கண்டோபா சித்தரிக்கப்படுவார். அவரது ஆடையணி மராட்டிய சருதார்,[6] போல அல்லது ஒரு இசுலாமிய பட்டாணி போல காணப்படும். இன்னும் சில சிற்பங்களில் அவரது ஒன்று அல்லது பல தேவியருடனும், நாய்களுடனும் அவர் காட்சியளிப்பார்.[7] சில இடங்களில் சிவலிங்கமும் அவரது அடையாளமாகக் காணப்படுகிறது .[8] பெரும்பாலான கண்டோபா ஆலயங்களில் சிவலிங்கம் மற்றும் குதிரையில் அமர்ந்த வடிவம் ஆகிய இரு தோற்றங்களிலும் கண்டோபாவுக்கு வழிபாடு இடம்பெறுகின்றது..
தொன்மங்கள்
[தொகு]பிரம்மாண்ட புராணத்தின் சேத்திர காண்டத்தின் ஒரு பகுதியாகச் சொல்லப்படும் மல்லாரி மான்மியம், கண்டோபாவின் கதையை விவரிக்கின்றது. (இன்றுள்ள பிரம்மாண்ட புராணப் பதிப்புகளில் மல்லாரி மான்மியத்தைக் காணக்கூடவில்லை[9]) சில ஆய்வாளர்கள், இம்மான்மியம் 1460-1510 இடையே இயற்றப்பட்டிருக்கலாம் என ஊகிக்கின்றனர்.[10] சித்தபல் கேசசிறீயால் 1585இல் எழுதப்பட்ட இதன் மராத்திய வடிவமொன்றும் கிடைக்கிறது.[11] கங்காதரரால் 1821இல் எழுதப்பட்ட சயாத்திரி மான்மியம், மார்த்தாண்ட விசயம் என்பனவும், வேறு வாய்மொழி இலக்கியங்களும் கண்டோபா பற்றிய தொன்மங்களாக அமைகின்றன.[12][13]
பிரமனிடம் பல வரங்கள் பெற்று வெல்லமுடியாதோராகத் திகழ்ந்த அசுரர்கள் மல்லன், அவன் தம்பி மணி ஆகியோரின் தொல்லை தாங்காமல், ஏழுமுனிவர்கள் இந்திரன், திருமால் சகிதம் ஈசனிடம் முறையிடுகிறார்கள். மஞ்சளால் அலங்கரிக்கப்பட்டு, அரிதரன் என்ற பெயரில், மார்த்தாண்ட வைரவராக சிவன் நந்தி மீது எழுந்தருளுகிறார். மணியும் மல்லனும் மார்த்தாண்ட வைரவரால் கொல்லப்படும் போது, தன் வெண்பரியை அவருக்குப் பரிசளிக்கும் மணி, அவரது எல்லா ஆலயங்களிலும் கோயில் கொள்ளும் வரத்தையும் பெறுகிறான். அவனுக்கு அடியவர்கள் ஆட்டிறைச்சி படைத்து வழிபடுகிறார்கள். மல்லனுக்கு கண்டோபா வரமளிக்க முற்பட்ட போது, அவன் நரமாமிசமும் உலகின் அழிவும் விழைந்ததாகவும், சீற்றமுற்ற கண்டோபா அவன் தலையரிந்ததாகவும், ஆலயப்படிகளில் பத்தர்களின் கால்களால் அவன் இன்றும் மிதிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. தொன்மங்களின் படி, மணிமல்லர்களின் அழிவு பிரேம்புரி எனும் தலத்தில் நிகழ்ந்தது.[14][15]
கண்டோபாவின் தேவியர் மாலசை, பானு ஆகிய இருவரும் சிவனின் தேவியரான பார்வதியும் கங்கையும் எனப்படுகிறது. மாலசையின் சகோதரரும் கண்டோபாவின் அமைச்சருமான கேகடி பிரதானன் திருமாலின் உருவம்.[16], அசுரரைக் கொல்ல கண்டோபாவிற்கு உதவிய நாய், கண்ணனின் உருவம். வெண்பரி நந்தியின் உருவம். மணியும் மல்லனும் மது கைடபரின் மறுபிறவிகள் என்று கண்டோபா பற்றிய தொன்மங்கள் மேல்நிலையாக்கப்படுகின்றன.[17] சில மரபுரைகளில் மணியும் மல்லனும் மணிமல்லன் என்ற ஒரே அசுரன். சில மரபுரைகளில் மாலசை அல்லது பானு எனும் கண்டோபாவின் தேவியும், நாயும், மணியின் குருதியைச் சேகரித்து, அவனை அழிக்க உதவுகிறார்கள்.[18]
தேவியர்
[தொகு]கண்டோபாவின் தேவியர், அவரை பல்வேறு சமூகங்கள் உரிமை கோர அடிப்படையாக அமைகின்றனர். கண்டோபாவின் முதன்மையான தேவியான மாலசை அல்லது மகாலசா, வாணி அல்லது இலிங்காயத வாணிக குலத்தைச் சேர்ந்தவர். அவரது இரண்டாவது தேவி பானு, தங்கர் எனும் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர். மாலசையின் திருமணம், கற்புமணமாகவும், பானுவின் திருமணம் களவுமணமாகவும் சித்தரிக்கப்படுகிறது. பார்வதி அல்லது மோகினியின் உருவாக, தீர்மர்சேத்து என்பாருக்கு மகளாகப் பிறந்த மாலசை, தைப்பூசமன்று, பலி (பெம்பர்) எனும் தலத்தில் கண்டோபாவை கரம்பிடிக்கிறாள். பானு இந்திரனுக்கு மகளாகப் பிறந்து பூவுலகில் கைவிடப்படுகிறாள். அவளை தங்கர் குல மாது ஒருத்தி எடுத்து வளர்க்கிறாள். மாலசையிடம் சூதாட்டமொன்றில் தோற்று பன்னீராண்டுகள் அஞ்ஞாதவாசம் புரிய ஒத்துக்கொள்ளும் கண்டோபா, பானுவின் வளர்ப்புத்தந்தையிடம் வேலைக்கமர்ந்து அவள் மீது காதல் கொண்டு அவளை அடைகிறார்.
தமிழ் நாட்டார் வழக்கில் வள்ளி - தெய்வானை இடையேயான மோதல்களை இவர்களிடமும் காணலாம். தன் தேவியரிடையேயான மோதலைத் தவிர்க்க, செயூரியின் மேற்புறம் மாலசையையும், கீழ்ப்புறம் பானுவையும் குடியமர்த்துகிறார் கண்டோபா. மூத்தவள் மாலசை நல்ல சமையல் காரி, ஆனால் பொறாமை பிடித்தவள். பானுவோ பேரழகி. கவர்ச்சியானவள். ஆனால் அவளுக்கு சமைக்கத் தெரியாது. தத்துவார்த்தபூர்வமாக மாலசையையும் பானுவையும் பண்பாடு மற்றும் இயற்கைக்கு முறையே ஒப்பிடுகிறார்கள். [19]
கண்டோபாவின் மூன்றாவது தேவியான இராம்பாய் சிம்பின், ஒரு தேவலோக அரம்பையின் உருவாக பூவுலகில் பிறந்த நெசவாளர் குலப்பெண். அவளை வேட்டையாடச் செல்லும் போது, செயூரியின் அருகே உள்ள பெல்சாரே எனும் கிராமத்தில் கண்டு மணம் புரிகிறார் கண்டோபா. நான்காமவளான புலாய் மாலின், மாலி எனும் தோட்டக்காரர் குலத்தவள். ஐந்தாமவலான சண்டாய் பகவின், எண்ணெய் வாணிக சமூகத்தவள். அவளை இசுலாமியர் ஒரு முசுலீம் என்று நம்புகிறார்கள். இவர்கள் எல்லோரையும் தவிர, கண்டோபாவுக்கு ஒப்படைக்கப்படும் தேவதாசியரான முரளிகள், அவரது தேவியராகவே கருதப்படுகின்றனர். .[20][21]
வழிபாடு
[தொகு]சிவவழிபாட்டுக்குச் சமனாக, அவரது கூறுகளை, குறிப்பாக கண்டோபாவை வழிபடும் வழக்கம், தக்காணப்பகுதியில் மிகப்பிரபலமாகக் காணப்படுகிறது. கண்டோபா கோரியதை அருளும் கருணைத்தெய்வமாக போற்றப்படுகிறார்.[22] [23] எனினும், ஒழுங்காகப் பூசிக்கப்படாவிட்டால் கண்டோபா சீற்றம் கொள்வார்.[24] மஞ்சள் தூள் (பண்டாரம்), வில்வம்பழங்கள், இலைகள், வெங்காயம் மற்றும் பிற காய்கறிகள் என்பன அவர் வழிபாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன.[25] கண்டோபாவுக்கு ஆலயத்துக்கு வெளியே ஆட்டிறைச்சி படைத்து வணங்குவதும் வழக்கம்.
நவாசு எனும் நேர்ச்சைகள், கண்டோபா வழிபாட்டில் குறிப்பிடத்தக்கவை. தீமிதித்தல், அலகு குத்துதல் என்பன அவற்றுள் கூறிப்பிடத்தக்கவை.[26] வாக்கியா (புலி) என்ற பெயரில் இளைஞர்களையும், முரளி என்ற பெயரில் உவதிகளையும் கண்டோபாவுக்கு ஒப்படைப்பது பண்டைய வழக்கம். இன்று முரளிகளை அவ்வாறு ஒப்படைப்பதில்லை. வாக்கியாக்கள் தங்களை கண்டோபாவின் நாய்க்குச் சமனாகக் கருதிக்கொள்கிறார்கள். கண்டோபவை மல்லு அல்லது அசுமத்துகான் என்று அழைக்கும் முசுலீம்கள், அவரை தெய்வமாகவும் வழிபடுகிறார்கள். செயூரியில் கண்டோபாவின் குதிரைகளைப் பராமரிப்போராக முசுலீம்களே இருந்து வருகின்றனர்.
தக்காணத்தில் 600 க்கும் மேற்பட்ட கண்டோபாவின் ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் பதினொரு ஆலயங்கள் சாக்கிரத்து சேத்திரங்கள் என்ற பெயரில் முக்கிய வழிபாட்டு மையங்களாக விளங்குகின்றன. அவற்றில் ஆறு மராட்டியத்திலும் ஐந்து வடகன்னடத்திலும் உள்ளன. இவை, செயூரி, பாலி, ஆதி மலியார், நற்றுக்கு, மன்னமைலார் என்பன குறிப்பிடத்தக்கவை.
குறிப்புகள்
[தொகு]- ↑ Singh p.ix
- ↑ Sontheimer in Hiltebeitel p.314
- ↑ Sontheimer in Feldhaus p.115
- ↑ Stanley in Hiltebeitel p.284
- ↑ Stanley in Hiltebeitel p.288
- ↑ Sontheimer in Hiltebeitel p.303
- ↑ Stanley (Nov. 1977) p. 32
- ↑ For worship of Khandoba in the form of a lingam and possible identification with Shiva based on that, see: Mate, p. 176.
- ↑ Sontheimer in Bakker p.103
- ↑ Sontheimer in Bakker pp.105-6
- ↑ Sontheimer in Bakker p.105
- ↑ Sontheimer in Hiltebeitel p.330
- ↑ Stanley in Hiltebeitel pp. 272,293
- ↑ Stanley in Hiltebeitel pp.272-77
- ↑ For a detailed synopsis of Malhari Mahtmya, see Sontheimer in Bakker pp.116-26
- ↑ Sontheimer in Hiltebeitel p.328
- ↑ Stanley in Hiltebeitel p.278
- ↑ Stanley in Hiltebeitel pp.280-4
- ↑ Sontheimer in Feldhaus p.117-8
- ↑ Sontheimer in Feldhaus p. 118
- ↑ Stanley (Nov. 1977) p. 33
- ↑ Stanley (Nov. 1977) p. 31
- ↑ Sontheimer in Bakker p.104
- ↑ Sontheimer in Hiltebeitel pp.332-3
- ↑ Underhill p.111
- ↑ Stanley in Hiltebeitel p.293
மேலதிக வாசிப்புக்கு
[தொகு]- Burman, J. J. Roy (Apr 14–20, 2001). "Shivaji's Myth and Maharashtra's Syncretic Traditions". Economic and Political Weekly 36 (14/15): 1226–1234.
- Gupta, Shakti M. (1988). Karttikeya: The Son of Shiva. Bombay: Somaiya Publications Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7039-186-5.
- Mate, M. S. (1988). Temples and Legends of Maharashtra. Bombay: Bharatiya Vidya Bhavan.
- Singh, Kumar Suresh; B. V. Bhanu (2004). People of India. Anthropological Survey of India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7991-101-3.
- Sontheimer, Günther-Dietz (1989). "Between Ghost and God: Folk Deity of the Deccan". In Alf Hiltebeitel (ed.). Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-981-9.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - Sontheimer, Günther-Dietz (1990). "God as King for All: The Sanskrit Malhari Mahatmya and its context". In Hans Bakker (ed.). The History of Sacred Places in India as Reflected in Traditional Literature. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09318-4.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - Sontheimer, Günther-Dietz (1996). Anne Feldhaus (ed.). Images of Women in Maharashtrian Literature and Religion. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7914-2837-0.
{{cite book}}
: Unknown parameter|chapterurl=
ignored (help) - Stanley, John M. (Nov 1977). "Special Time, Special Power: The Fluidity of Power in a Popular Hindu Festival". The Journal of Asian Studies (Association for Asian Studies) 37 (1): 27–43. doi:10.2307/2053326. https://archive.org/details/sim_journal-of-asian-studies_1977-11_37_1/page/27.
- Stanley, John. M. (1988). "Gods, Ghosts and Possession". In Eleanor Zelliot, Maxine Berntsen (ed.). The Experience of Hinduism.
- Stanley, John. M. (1989). "The Captulation of Mani: A Conversion Myth in the Cult of Khandoba". In Alf Hiltebeitel (ed.). Criminal Gods and Demon Devotees: Essays on the Guardians of Popular Hinduism. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88706-981-9.
- Underhill, Muriel Marion (1991). The Hindu Religious Year. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-0523-3.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜெயூரி வலைத்தளம்
- கண்டோபா ஆலயங்கள்
- ஜெயூரி ஆலய வலைத்தளம் பரணிடப்பட்டது 2018-03-30 at the வந்தவழி இயந்திரம்